Apr 29, 2008

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தில் ஆய்வு முயற்சிகள் - உயர் கல்வி நிறுவனங்களின் பங்கு

உலகில் பல நாடுகளில் பேசப்படும் தமிழ்மொழி அந்தந்த நாட்டுச் சூழலுக்கு ஏற்பத் தம் இலக்கியச் செல்வத்தை வளர்த்துக்கொண்டு வருகிறது. இலக்கிய வளர்ச்சிக்கு நல்ல ஊக்குவிப்பும் தரமான ஆய்வும் உறு துணையாக அமைகின்றன. ஆய்வு என்பது பண்பட்ட மக்களின் வளர்ச்சியைக் காட்ட வல்லது. அதிலும் இலக்கிய வளர்ச்சிக்கு உயர் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் ஆய்வுகள் நல்லதொரு உரமாக அமையக் கூடியன. அவ்வகையில் சிங்கப்பூரின் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உயர் கல்வி நிறுவனங்களின் பங்கு என்ன என்பதை இனிக் காண்போம்.

உயர்கல்வி நிறுவனங்கள் என்னும் தொடர் பொதுவாகப் பல்கலைக்கழகங்கள், தொழில் நுட்பக் கல்லூரிகள் ஆகியவற்றைக் குறிக்கக் கூடியது. அப்படிப் பார்க்கையில் சிங்கப்பூரில் தேசிய பல்கலைக் கழகமும், தேசியக் கல்விக்கழகமும்தான் தமிழ் இலக்கியம் தொடர்பான ஆய்வுகளை நடத்தி வந்துள்ளன, வருகின்றன. பொதுவாகச் சிங்கப்பூரில் தமிழிலக்கிய ஆய்வு என்று குறிப்பிடும்போது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு சில கல்வி நிறுவனங்களும் சில அமைப்புகளும்தான் அவற்றை ஏற்று நடத்தி வந்துள்ளன, வருகின்றன.

கல்வி நிறுவனங்களைச் சார்ந்தவைகளுள் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகமும், தேசியக் கல்விக்கழகமும், யீசூன் தொடக்கக் கல்லூரியும் குறிப்பிடத்தக்கவையாகும். இவற்றுள் யீசூன் தொடக்கக் கல்லூரி உயர் கல்வி நிறுவனங்களின் வரிசையில் இடம்பெறாதாது. இருப்பினும் அது “புகுமுகவகுப்புக்களுக்கான தமிழ் இலக்கியக் கருத்தரங்கு” என்று கடந்த 18 ஆண்டுகளாகத் தொடர்ந்து கருத்தரங்குகளை நடத்தி வருகின்றது. எனவே அதனைத் தவிர்ப்பது சரியல்ல. ஆகையால் அதனையும் இணைத்து இத்தலைப்பை அணுகுவதே பொருத்தமாக இருக்கும்.

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய ஆய்வு முயற்சிகளில் உயர் கல்வி நிறுவனங்களின் பங்கு என்னும் இத்தலைப்பைக் கீழ்க்கண்ட உட்தலைப்புகளின் அடிப்படையில் பார்க்கலாம்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும் தமிழ் இலக்கிய ஆய்வும்
தேசியக் கல்விக்கழகமும் தமிழ் இலக்கிய ஆய்வும்
யீசூன் தொடக்கக் கல்லூரியும் தமிழ் இலக்கிய ஆய்வும்
பிற உயர்கல்வி நிறுவனங்களும் தமிழ் இலக்கிய ஆய்வும்.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகமும் தமிழ் இலக்கிய ஆய்வும்

முதலில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் தமிழ் இலக்கிய ஆய்வும் என்னும் தலைப்பில் அமைந்துள்ளவற்றைப் பார்ப்போம். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பட்டப் படிப்புக்கு என்று தனியே ஒரு பிரிவு இல்லையெனினும் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் தொடர்பான ஆய்வுகளுக்குப் பல்கலைக் கழகத்தில் இயங்கி வருகின்ற சிங்கப்பூர்ப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவை ஆரம்பத்தில் வித்திட்டது எனலாம். 1977ஆம் ஆண்டு ஏப்ரல் 9, 10 தேதிகளில் சிங்கப்பூரில் தமிழும் தமிழிலக்கியமும் என்னும் ஆய்வரங்கத்தைச் சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை கூட்டிற்று. இவ்வாய்வரங்கத்தை நடத்த முன்னின்றவர் தமிழர்களின் மீது மிகவும் பற்றுக்கொண்டு ஆய்வரங்குகள் பல நடத்திய டாக்டர் அ வீரமணி ஆவார்கள். இவரின் அரிய முயற்சியே சிங்கப்பூரில் தமிழ் தொடர்பான ஆய்வுகளுக்கு வித்திட்டது என்றால் அது மிகையாகாது. இன்னும் சொல்லப்போனால் ஆய்வரங்குகள் மட்டும் நடத்திவிட்டுச் செல்லாமல் அங்குப் படிக்கப்பட்ட கட்டுரைகள் உடனுக்குடன் புத்தகங்களாக வரவேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்து அவற்றைப் புத்தகங்களாகக் கொண்டுவந்தவர் இவர் ஆவார். “மலாயாப் பல்கலைக் கழகத்தில் அ . வீரமணி தம் பி ஏ பட்ட படிப்பின் ஒரு பாடமாக, “மலாயா- சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும் 1900-1960” என்னும் தலைப்பில் ஆய்வு செய்து 1970இல் ஒரு கட்டுரை படைத்துள்ளார். இதுவே பல்கலைக்கழக நிலையில் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் பற்றி மேற்கொண்ட முதல் ஆய்வு எனக் கருதலாம்”. (டாக்டர் திண்ணப்பன் - சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் சாதனைகளும் எதிர்காலத் திட்டங்களும், பக்கம்60)

டாக்டர் அ வீரமணியின் முயற்சியே பின்னாளில் சிங்கப்பூரில் தமிழ், தமிழர், தமிழ் இலக்கியம் தொடர்பான ஆய்வுச் சிந்தனைகளைத் தொடக்கி வைத்தது. இவர் தொகுத்து வெளியிட்ட முதல் ஆய்வரங்க மலரில் ஒன்பது கட்டுரைகள் படிக்கப்பட்டன. அவற்றுள் இரண்டு கட்டுரைகள் நேரிடையாகத் தமிழ் இலக்கியம் தொடர்புடையவையாகும். 1. சிங்கப்பூரில் தமிழ்ச் சிறுகதை என்னும் தலைப்பில் இராம கண்ணபிரானால் படைக்கப்பட்ட கட்டுரையும் 2 சிங்கப்பூரில் தமிழ் நாடகங்கள் என்னும் தலைப்பில் எஸ் எஸ் சர்மாவால் படைக்கப்பட்ட கட்டுரையும் அவையாகும்.

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் மக்கள்- தொடர்ப்புத் துறையின் - பங்கு ஒரு மதிப்பீடு என்னும் தலைப்பில் அ முருகையன் அவர்களால் படைக்கப்பட்ட கட்டுரை, வானொலி இலக்கியத் துறைக்கு ஆற்றிய பங்கினை எடுத்துக்கூறும் முகமாக அமைந்தது. தமிழர், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்க்கல்வி எனப் பல நோக்குகளில் பின்னர் இரண்டாண்டுக்கு ஒரு முறை ஏற்பாடு செய்யப்பட்டு இவ்வாய்வரங்குகள் தொடர்ந்தன.

1977ஆம் ஆண்டிலிருந்து 1989 ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஏழு ஆய்வரங்குகள் நடைபெற்றன. இக்காலக்கட்டத்தில் பேச்சுத்தமிழ், பள்ளிகளில் தமிழ், ஆலயங்கள், சமுதாயம், வர்த்தகம், தமிழர் முன்னேற்றம், இதழியல் முதலான தலைப்புகளில் மொத்தம் 93 கட்டுரைகள் படிக்கப்பட்டன. இவற்றுள் தமிழ் இலக்கியம் தொடர்பானவை 17 கட்டுரைகள் ஆகும். பல்கலைக்கழகத் தமிழர் பேரவைத் தொடர்பாக இரு ஆய்விதழ்கள் முறையே 1977, 1982 இல் வெளியிடப்பட்டன. இவ்வாய்விதழ்களில் இலக்கியம் தொடர்பாக 6 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

அ வீரமணி அவர்கள் தேசியப் பல்கலைக் கழகத்தில் பணி புரிகின்ற காலத்தில் இலக்கியம் தொடர்பான சில ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். பாவலர் நெஞ்சம்(1991), சிங்கப்பூர் வளர்ச்சியில் தமிழ்மொழி(1996) என்னும் நூல்கள் இவரது தமிழ்மொழி, தமிழிலக்கிய ஆய்வுகளுக்குக் கட்டியம் கூறக்கூடியன. இவர் பல அமைப்புகளுக்கு மதியுரைஞராக இருந்தார். அந்த அமைப்புகள் வெளிட்ட நூல்களின் பதிப்பாசிரியராக இவர் விளங்கினார். இருப்பின் அவ்வமைப்புகள் உயர்கல்வி நிறுவனங்களைச் சாராததால் அந்நூல்கள் இங்குக் குறிப்பிடப்படவில்லை.

சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவாக இயங்கும் கலைகள் மன்றம் நான்கு இன மக்களின் இலக்கியப் படைப்புகளைத் தேர்வுசெய்து ஆங்கில மொழிபெயர்ப்புகளுடன் நூல்களாக வெளியிட்டுள்ளது. அவை

The Poetry of Singapore (1985)
The fiction of Singapore (1990)
Journeys: Words, Home and Nation (1995)
Memories and Desires, A Poetic History of Singapore (1998)
Rhythms: A Singaporean Millennial Anthology of Poetry (2000)

இத்தொகுப்பு நூல்களின் முன்னுரையில் இவற்றின் தொகுப்பாசிரியர்கள் சிங்கபூப்பூர்த் தமிழிலக்கிய வரலாறுகள் குறித்து ஆய்வுநிலையில் அறிமுகம் செய்து வைக்கின்றனர். இவ்வாய்வுகளும் படைப்புகளும் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் குறித்துப் பிற இனத்தவர்கள் அறிய வாய்ப்பைத் தருகிறது.

டாக்டர் சுப திண்ணப்பன், டாக்டர் ஏ ஆர்ஏ சிவகுமாரன் ஆகிய இருவராலும் எழுதப்பட்ட“சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாறு ஒரு கண்ணோட்டம்” என்னும் நூல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக கலைகள் மன்றத்தினால் 2002ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நூல் சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வரலாறு பற்றி அறிய விரும்புவாருக்கு ஒரு கலங்கரை விளக்கமாக இருந்து வழிகாட்டக் கூடியதாகும். சிங்கப்பூர்த் தமிழிலக்கியத் தொடர்பான ஆய்வு முயற்சிகள் பெரும்பாலும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கலைகள் மன்றத்தின் சார்பாக டிசம்பர் 1980 இலிருந்து 2000ஆம் ஆண்டுவரை வெளிவந்துள்ள 31 சிங்கா (Singa) இதழ்களில் அவ்வவ்போது சிங்கப்பூர்த் தமிழிலக்கியம் தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகளும், இலக்கியப் படைப்புகளும் இடம்பெறுவதுண்டு நான்கு மொழிப் படைப்புகளும் இதில் இடம்பெறுவதோடு ஆங்கில மொழிபெயர்ப்பும் இதில் இடம்பெறும். கலைகள் மன்றத்தினால் ஆங்கிலத்தில் வெளியிடப்பெறும் மற்றொரு இதழ் the arts என்பதாகும். இவ்வாய்வு இதழிலும் சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன என்பதையும் இங்குக் குறிப்பிடவேண்டும்.

சிங்கப்பூர்க் கலைகள் மன்றமும் கருத்தரங்குகளும்

சிங்கப்பூர்க் கலைகள் மன்றம் 2002ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 5, 6 தேதிகளில் “உலக அளவில் தமிழர்” என்னும் கருத்தரங்கத்தையும் 2004 செப்டம்பர் 7,8 தேதிகளில் “சிங்கப்பூர் - மலேசிய தமிழ் இலக்கிய மாநாடு” என்னும் கருத்தரங்கத்தையும் நடத்தியது. பல்கலைக் கழகமே முன்வந்து நடத்திய இந்தக் கருத்தரங்கில் உலகின் பல நாடுகளிலிருந்தும் ஆய்வாளர்கள் கட்டுரை படித்தனர். மேலும் இந்த ஆய்வரங்குகளில் தமிழ் இலக்கியம் தொடர்பான கட்டுரைகளும் இடம்பெற்றன.

சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழக தெற்காசியத் துறையும் இலக்கிய ஆய்வும்
சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசியத் துறை 12 அக்டோபர் 2003இல் ஏற்பாடு செய்த ஆய்வரங்கம் ஒரு புதுமையானது. சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு வித்தியாசமானதும் கூட. கவிஞர் ந பழநிவேலுவின் படைப்புகள் குறித்து முனைவர் பட்டம் பெற்ற (ஒருவரைத் தவிர) 12 ஆய்வாளர்கள் பல்வேறு கூறுகளில் ஆய்வு செய்து கட்டுரை படித்தனர். முழுவதும் (ஒருவரைத் தவிர) முனைவர் பட்டம் பெற்றவர்களைக் கொண்டு ஆய்வுக்கட்டுரைகள் படிக்கப்பெற்ற ஆய்வரங்கம் இது.

இக்கருத்தரங்குகளினால் ஏற்பட்ட விளைவுகள்.

டாக்டர் அ வீரமணி அவர்களின் ஆலோசனையால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வாய்வரங்குகள் சிங்கப்பூர்த் தமிழர்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சிங்கப்பூர்த் தமிழர்கள் எத்திசையை நோக்கிச் செல்லுகிறார்கள், அவர்கள் எதிர்காலத்தில் என்னென்னவற்றைச் சந்திக்க நேரிடும் அவற்றை நாம் சமாளிக்க என்னென்ன செய்யவேண்டும் முதலான சிந்தனைகளைக் கற்றவர்களிடத்தும் சமூகத் தலைவர்களிடத்தும் இவ்வாய்வரங்குகள் ஏற்படுத்தின. குறிப்பாகப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு இடம்பெற வேண்டும் என்னும் எண்ணத்தைப் பலரின் மனத்தில் ஏற்படுத்தியது. அதுபோல் இலக்கியவாதிகள் தங்கள் படைப்புகளை நூல் வடிவில் கொண்டு வருதல் அவசியம் என்பதைப் படைப்பாளர்களுக்கு நன்கு உணர்த்தியது. செய்தித்தாளில் இடம்பெறும் படைப்புகள் காலவோட்டத்தில் மறக்கப்படும். நூல் வடிவத்தில் இடம்பெறும் படைப்புகளே வரலாற்றில் இடம்பெறும் முதலான பல கருத்துகளை மக்கள் மத்தியில் பதிய வைத்தது. இலக்கியப் படைப்புகளின் தரமும் உரசிப் பார்க்கப்பட்டது. அதனால் நல்ல தரமான படைப்புகள் கிடைக்கலாயின.

2. தேசியக் கல்விக்கழகமும் தமிழ் இலக்கிய ஆய்வும்

உயர்கல்வி நிறுவனங்களின் வரிசையில் இடம்பெறும் அடுத்து நிறுவனம் தேசியக் கல்விக்கழகமாகும். தேசியக் கல்விக்கழகம் தமிழ் இலக்கியத்தை முன்னிறுத்தி கருத்தரங்குகளை நடத்தவில்லை. ஆனால் ஆரம்பக் காலத்தில் தமிழ் மொழி தொடர்பாக ஆய்வரங்குகளை நடத்திடும்போது இலக்கியம் தொடர்பாகச் சில கட்டுரைகள் இடம்பெறுவதுண்டு. 2000ஆம் ஆண்டுக்குப் பின் அதன் பார்வை மொழி தொடர்பாகவே அமைந்தது. அதற்குக் காரணம் தேசியக் கல்விக்கழகத்தின் பணி கற்றல் கற்பித்தல் தொடர்பானவற்றையே மையமாகக் கொண்டு அமைவதால் இலக்கியத்தைத் தனியாக 1992வரை முன்னிறுத்தவில்லை.

“கல்விக்கழகம் 1990ஆம் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின் ஓர் உறுப்பாகத் தேசியக் கல்விக்கழகம் என்னும் பெயர் மாற்றம் பெற்றது. அங்குக் கலைப்புலத்தின் கீழ் இயங்கிய தமிழ்மொழி பண்பாட்டுப் பகுதி, தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்க் கல்வி பற்றிப் பட்டத்திற்குப் பிந்திய நிலை அதாவது முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டது”. (டாக்டர் திண்ணப்பன் - சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் சாதனைகளும் எதிர்காலத்ததிட்டங்களும், பக்கம்60)அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி முதன்முதலில் ஏ ஆர்ஏ சிவகுமாரன் முதன் முதலில் முனைவர் பட்ட ஆய்வேடுகளைத் தமிழில் எழுத அனுமதி பெற்று 1992ஆம் ஆண்டு முதன்முதலில் சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் 1965-1990 - ஒரு திறனாய்வு என்னும் தலைப்பில் டாக்டர் பட்ட ஆய்வுக்குப் பதிந்து கொண்டார். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தினால் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் முதன்முதலில் முனைவர் பட்ட ஆய்வுநிலையில் அப்பொழுதுதான் ஆய்வு செய்யப்பட்டது; எனினும் 1965-1990 காலக்கட்டத்தில் வெளிவந்த சிறுகதைகளைப் பற்றி ஏ ஆர்ஏ சிவகுமாரன் விரிவஞ்சி ஆய்வு செய்யவில்லை.

டாக்டர் தியாகராஜன் சிங்கப்பூர் மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளில் 1965-1990 காலக்கட்டத்தில் நூல்களாக வெளியிடப்பட்ட புதுக்கவிதைகளை ஒப்பீட்டு நோக்கில் முனைவர் பட்டத்திற்காகத் தேசியக் கல்விக் கழகத்தில் ஆய்வு செய்து 2001ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். தொடர்ந்து டாக்டர் சீதாலட்சுமி சிங்கப்பூரில் தமிழ்மொழி இலக்கிய வளர்ச்சியில் மக்கள் தொடர்புச் சாதனங்களின் பங்களிப்பு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து 2001 டாக்டர் பட்டம் பெற்றார்.

தேசியக் கல்விக்கழகத்தில் படிக்கும் மாணவ ஆசிரியர்கள் தாங்கள் படிக்கும் இலக்கியப் பாடம் தொடர்பாகச் சிற்சில வேளைகளில் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்வது உண்டு. சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாறு, இலக்கியங்கள் வெளிவர உறுதுணாயாக இருந்த தமிழ்முரசு நாளேடு, சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியப் படைப்பாளிகள், இலக்கியப் படைப்புகள் முதலான பல தலைப்புகளில் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். ஆனால் அவை நூல்களாக வரவில்லை. இலக்கியப் பாடத்தின் ஒரு கூறாக அவற்றைச் செய்துள்ளனர்.

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய மனிதராக விளங்கும் தமிழவேள் கோ சாரங்கபாணியையும் அவரை அறிந்தவர்கள் பற்றியும் தேசியக் கல்விக் கழகத்தில் 2000ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் (திரு.சாகுல் ஹமீது, திரு.தேவகுமார், குமாரி.பூங்குழலி) ஆய்வு செய்து மலேசியா தேசியப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஏற்பாடு செய்த “தமிழவேள் கோ சாரங்கபாணி முதலாவது மாநாட்டில்” கட்டுரை படைத்துள்ளனர். இம்மாநாட்டில் டாக்டர் கா இராமையா, டாக்டர் A Ra சிவகுமாரன், திருமதி சீதாலட்சுமி, திரு ச செகதீசன் ஆகியோரால் படைக்கப்பட்ட கட்டுரைகள் 2001ஆம் ஆண்டு “சாரங்கபாணியின் தமிழ்த்தொண்டு - ஓர் ஆய்வு” என்னும் நூலாக வெளியீடு கண்டது.

தேசியக் கல்விக்கழகத்தில் பணிபுரிந்த நா கோவிந்தசாமி 1977இல் வெளிவந்த சுமார் 400 சிங்கப்பூர் மலேசிய சிறுகதைகளை இலக்கியக்களம் என்னும் அமைப்பின் கீழ் ஆய்வுசெய்து 1981ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டார். திருவாளர்கள் ஆர்.சூடாமணி, டாக்டர் மா,இராமலிங்கம், டாக்டர் சு வேங்கடராமன், டாக்டர் இரா தண்டாயுதம், டாக்டர் தா வே. வீராசாமி, திரு. வை திருநாவுக்கரசு ஆகிய திறனாய்வாளர்கள் செய்த மதிப்பீடுகளின் பயனாக இந்த 17 சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. பின்னர் இச்சிறுகதைகளைத் தொகுத்துச் சிங்கப்பூர் இலக்கியக்களம் என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டார்.

நா கோவிந்தசாமி சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வளர்ச்சி: ஒரு சமூகவியற் கண்ணோட்டம் என்னும் தலைப்பில் 1979ஆம் ஆண்டு சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்த இலக்கியக் கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரை சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் தொடர்பாக ஆய்வு செய்வோர்க்கு ஒரு முன்னோடி ஆய்வாக அமைந்தது.

3. யீசூன் தொடக்கக் கல்லூரியும் இலக்கிய ஆய்வும்

யீசூன் தொடக்கக் கல்லூரியின் இந்தியக் கலாசார மன்றம் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பு மாணவர்களுக்காக 15- 3- 1988ஆம் நாள் தமிழ் இலக்கியக் கருத்தரங்கு ஒன்றினை முதன் முதலில் ஏற்பாடு செய்தது. இவ்வாய்வரங்கிற்கு ஏற்பாடு செய்த அக்கல்லூரியின் தமிழாசிரியர் வி ஆர் பி மாணிக்கம் அவர்கள் “மாணவர்களின் இலக்கிய ஆர்வத்தைப் பெருக்கும் வகையிலும் மேல்நிலைத் தேர்வுக்கு உதவி செய்யும் நோக்கத்திலும் இக்கருத்தரங்கில் நாவல், கவிதை, நாடகம், சிறுகதை ஆகிய தலைப்புகளில்ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்பட்டன.” என்று குறிப்பிடுகிறார். 1988ஆம் ஆண்டு தொடங்கப்பெற்ற இக்கருத்தரங்கு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பெற்று வருகின்றது என்பது சிங்கப்பூர் வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்றாகும். இருப்பினும் இவ்வாய்வரங்கு முழுமையாகத் தமிழ் இலக்கியத்தை மையமாகக்கொண்டு நடத்தபெற்றது என்று சொல்வதற்கில்லை. ஆண்டுதோறும் சமுதாயத்தில் நிகழ்வுறும் பிரச்சினைகளின் அடிப்படையிலும் கற்றல் கற்பித்தல் தொடர்பாகவும் தலைப்புகள் தேர்வு செய்யப்பெற்றுக் கட்டுரைகள் படிக்கப்பட்டன. 18 ஆண்டுகளாக நடைபெறும் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்புக் கருத்தரங்கில் இதுவரை சுமார் 60 கட்டுரைகள் படிக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் இலக்கியத் தொடர்பாக 11 கட்டுரைகள் படிக்கப் பெற்றுள்ளன. தொடர்ந்து நடந்துவரும் இவ்வாய்வரங்கம் சமுதாயத்திலும் மாணவர்களின் நிலையிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்றால் அது மிகையல்ல. இலக்கியத்தின் பாலும் சமுதாயப் பிரச்சினைகள் தொடர்பாகவும் மாணவர்களையும் சமுதாயத்தின்பால் அக்கறை கொண்டவர்களையும் இக் கருத்தரங்கம் விழிப்படையச் செய்து வருகிறது.

4. பிற உயர்கல்வி நிறுவனங்களும் தமிழ் இலக்கிய ஆய்வும்.

சிங்கப்பூர் இலக்கியங்கள் தொடர்பாகப் பல ஆய்வுகள் தமிழ்ப் பல்கலைக் கழகங்களில் நடைபெற்றுள்ளன. M Phil பட்ட படிப்புக்குச் சிங்கப்பூர் இலக்கியம் தொடர்பாகத் தலைப்புகள் எடுத்துக்கொள்ளப்பட்டு ஆய்வுகள் நடைபெற்று வந்துள்ளன வருகின்றன. குறிப்பாகச் சிங்கப்பூர் கவிஞர் மு தங்கராசனின் கவிதை நூல்களான அணிகலன், உதயம், மகரந்தம், மாதுளங்கனி, பனித்துளிகள், பொய்கைப் பூக்கள் ஆகிய ஆறு நூல்களையும் உள்ளடக்கி ஓர் ஆய்வு நிகழ்ந்துள்ளது. “மு தங்கராசனின் கவிதைகளில் ஓர் உள்ளடக்கப் பார்வை” என்னும் தலைப்பில் M Phil பட்டத்திற்கான ஆய்வேடு மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் கி ர ரேவதி என்பவர் சமர்பித்துப் பட்டம் பெற்றுள்ளார். மு தங்கரசானின் சிறுகதைகளும் பல்கலைக்கழக அளவில் ஆய்வுக்கு உட்பட்டுள்ளன. “சிங்கைக் கவிஞர் மு தங்கராசனின் சிறுகதைத்திறன்” என்னும் தலைப்பில் M Phil பட்டத்திற்கான ஆய்வேடு சென்னைப் பல்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுளது. இவ்வாய்வினைச் செய்து பட்டம் பெற்றவர் ஸ்ரீதர் ஆவார்.

சிறுகதை எழுத்தாளரான ஜெ எம் சாலியின் படைப்புகள் குறித்து இரு எம் பில் பட்ட ஆய்வுகள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் ஒரு ஆய்வு மதுரை காமராசர் பல்கலைக்ககழகத்திலும் முறையே சமர்பிக்கப்பட்டுப் பட்டங்கள் பெறப்பட்டுள்ளன.

தற்சமயம் ஜெ எம் சாலியின் படைப்புகள் குறித்து ஒரு முனைவர் பட்ட ஆய்வு பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் சிங்கப்பூர் சிறுகதைகள் குறித்து அழகப்பா பல்கலைக்கழகத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த ஆய்வுகள் தவிர்த்துச் சிங்கப்பூரிலிருந்து தமிழகத்திற்குத் தமிழ் பி ஏ படிக்கச்சென்ற ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழாசிரியர்கள் தங்கள் பாடப்பகுதியில் ஒரு கூறாக நிகழ்த்திய ஆய்வுகளும் உள்ளன. எல்லா ஆசிரியர்களும் இத்தகு ஆய்வைச் செய்யவில்லை. சில கல்லூரிகளில் மட்டுமே இத்தகு ஆய்வு செய்வதற்கு வாய்ப்பு வசதிகள் உள்ளன. அவ்வாய்வுகளுள் சில வருமாறு

மா லோஸனி - பரணன் கவிதைகள்

மஞ்சுளா - முருகதாசனின் சிறுவர் பாடல்கள்
சரவணன் - நா கோவிந்தசாமியின் தேடி - ஒரு திறனாய்வு
இளவரசி - சிங்கப்பூரில் தமிழ் மேடை நாடகங்களின் வளர்ச்சி 1987-1997
அன்பரசி - வீரப்பன் லட்சுமியின் சிறுகதைகள் - ஓர் ஆய்வு
சீத்தாராமன் - சிங்கப்பூரில் சிறுகதை
எம் ஏ பட்டத்திற்காகவும் சில தமிழாசிரியர்கள் சிங்கப்பூர் இலக்கியம் தொடர்பாக ஆய்வுகள் செய்துள்ளனர். அவை வருமாறு

எஸ் ஜெகதீசன் - சிங்கப்பூர் இலக்கியம் இராம கண்ணபிரானின் உமாவுக்காக - ஒரு திறனாய்வு
மா லோஸனி - முருகானந்தம் கவிதைகள்

இவ்வாறு சிங்கப்பூருக்கு அப்பாலும் சிங்கப்பூர் இலக்கியம் தொடர்பான ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன.

பொதுவாக உயர் கல்வி நிறுவனங்களில் மட்டும் இலக்கிய ஆய்வுகள் சிங்கப்பூரில் நிகழவில்லை. சொல்லப்போனால் உயர்கல்வி நிறுவனங்களைத் தவிர்த்து அதிக ஆய்வுகள் சங்கங்களும் அமைப்புகளும் ஏற்பாடு செய்த கருத்தரங்குகளில் படைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்துக் குறிப்பிடும் டாக்டர் திண்ணப்பன் அவர்கள் “அகலமான போக்கில் தகவல்களைத் திரட்டித்தரும் முயற்சிகளே அதிகம். ஆழமாகக் காணும் போக்குப் பெருக நாம் முயல வேண்டும். அளவால் மிகுதியாகத் தோன்றலாம். தரத்தால் உயர்வுடையவை என்று கூறிவிட முடியாது. என்கிறார்” – (டாக்டர் சுப திண்ணப்பன் - சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் சாதனைகளும் எதிர்காலத் திட்டங்களும், பக்கம்77).

முடிவுரை

சிங்கப்பூரில் இலக்கியத் தொடர்பான ஆய்வுகள் உயர்கல்வி நிறுவனங்களில் இன்னும் அதிகமாக இடம்பெற வேண்டும். அப்பொழுதுதான் இலக்கியப் படைப்பாளிகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் கிடைக்கும். தரமான ஆய்வுகள் வழித் தரமான இலக்கியங்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தீயில் இட்ட பொன்னே மிளிரும் . அதுபோல ஆய்வுகளுக்கு உட்படும்போதே தரமான இலக்கியங்களும் உருவாகும்.

துணைநூற் பட்டியல்
டாக்டர் அ வீரமணி - சிங்கப்பூர் வளர்ச்சியில் தமிழ்மொழி
சிங்கப்பூர்ப் பல்கலைக் கழகத் தமிழர் பேரவை - சிங்கப்பூரில் தமிழும் தமிழிலக்கியமும் ஆய்வரங்க மலர் Vol 1,2,3,4,5,6,7
பல்கலைக் கழகத் தமிழர் பேரவை ஆய்விதழ் (1977, 1982)
டாக்டர் ஏ ஆர்ஏ சிவகுமாரன் - சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் சாதனைகளும் எதிர்காலத் திட்டங்களும்
டாக்டர் கா இராமையா - சாரங்கபாணியின் தமிழ்த் தொண்டு - ஓர் ஆய்வு
வரலாற்றுத் துறை, மலேசியத் தேசியப் பல்கலைக்கழகம், பாங்கி, சிலாங்கூர்- நம் முன்னோடிகள்

0 comments: