Apr 29, 2008

பண்பாட்டின்வழி மொழிக்கல்வி

உலக இயக்கத்தின் அடிப்படையாக விளங்குவது அந்தந்த நாட்டு மக்களின் பண்பாடு. பண்பாட்டோடு விளங்கும் நல்லவர்கள் இருப்பதனால்தான் “நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யுமாம் மழை” என்பர். இந்தப் பண்பாடு என்பது பல பண்புகளின் கூட்டுறவில் முகிழ்த்தது ஆகும். இதுபற்றிக் கூறும் முன்னாள் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் பொன்னுசாமி அவர்கள் பண்பு என்பது ஒருமை; பண்பாடு என்பது பன்மை என்பார்.

பண்பாடு என்னும் சொல் நம் தமிழிலக்கியத்தில் சங்க காலத்திலிருந்தே வந்துள்ளதா? இல்லை. 1937இல் ரசிகமணி டி கே சிதம்பரநாத முதலியார் இச்சொல்லை உருவாக்கினார் என்று வையாபுரிப்பிள்ளை தம் தமிழ்ப் பண்பாடு என்னும் நூலில் கூறியிருப்பதைக் காணலாம். தமிழ்ப் பண்பாடு என்பது தமிழ் உணர்வை, தமிழ்ச்சொற்களை இணைத்து நிற்பது என்பதை மறந்துவிடக்கூடாது.

கற்பித்தலும் பண்பாடும்

மொழி அல்லது இலக்கியம்வழிப் பண்பாட்டை அறிதல் என்பது பொதுவாகப் பின்பற்றப்படும் ஒன்று. ஆனால், பண்பாட்டுவழி மொழிக் கல்வி என்பது புதிய நெறிமுறை. மொழியையும் இலக்கியத்தையும் ஒரு பாடப் பகுதியாகக் கற்பிக்கப்படும் ஒரு இயந்திரத் தன்மையைப் புறக்கணித்துவிட்டுப், பண்பாட்டை முதலில் வைத்து அதன்வழி மொழியைக் கற்பிப்பதுதான் இம்முறை ஆகும்.

பண்பாட்டின்வழி இலக்கணம் கற்பித்தல்

“மூத்தோர் சொல் கேள்”, “பெரியாரைத் துணைக்கோடல்” என்பன நம் தமிழ் வழக்கு. அதாவது பெரியவர்களுக்கு மதிப்புக் கொடுப்பது என்பது நம் பண்பாடு. இப்பாண்டினை ஒட்டியே நம் மொழியும் அமைந்துள்ளது. சாதாரணமாக நம்மைவிட வயதில் குறைந்தவர்களைக் குறிப்பிடும்போது ‘நீ’ என்கிறோம். வயதில் பெரியவர்களைச் சுட்டும்போது ‘நீங்கள்’ என்கிறோம். இவற்றுள் நீ என்பது ஒருமை; நீங்கள் என்பது பன்மை. இது பொதுவான இலக்கணக்கூறு. இருப்பினும் வயதில் முதிர்ந்தவர் எண்ணிக்கையில் ஒருவராக இருந்தாலும் பன்மையைப் பயன்படுத்துகிறோம். இது மரியாதை ஒருமை. இந்தப் பண்பாட்டுக் கூறுகளை எடுத்துக் கூறுவதன்வழி இலக்கணக் கூறுகளில் ஒன்றாகிய ஒருமை, பன்மை, மரியாதை ஒருமை ஆகியவற்றைக் கற்பிக்க முடியும். அன்றியும், முன்னிலையில் இருக்கும் ஒருவரை அழைப்பதற்கு என்னென்ன சொற்களைப் பயன்படுத்தலாம்; அவற்றை எந்தெந்த வேளைகளில் பயன்படுத்தலாம் என்பனவற்றையும் அறியலாம். எடுத்துக்காட்டாக,

நீ- நம்மை விட வயதில் குறைந்தவர்களைக் குறிப்பிடும்போது
நீர் - சம வயதுடையவர்களைக் குறிப்பிடும்போது
நீவிர்/நீங்கள் - நம்மைவிட வயதில் அதிகமானவர்களைக் குறிப்பிடும்போது
தாங்கள் - சான்றோர்களையும் உயர்ந்த நிலையில் உள்ளவர்களையும் உயர்
பதவி வகிப்பவர்களையும் சுட்டும்போது
அடிகள் - துறவிகள், ஞானிகள் முதலியோரைச் சுட்டும்போது
இச்சொற்கள் முன்னிலையில் இருக்கும் ஒருவரைக் குறிப்பிடத்தான் பயன்படுகின்றன. இருப்பினும் நமது பண்பாட்டின்வழி விளக்கும்போது இச்சொற்களின் ஆழ்ந்த பொருளை நன்கு உணரச் செய்யலாம். அன்றியும், மொழிவளம் பெருகவும் எந்தெந்தச் சூழல்களில் எந்தெந்தச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்னும் நிலையையும் உணர்த்த முடியும்.

மேற்குறிப்பிட்டதுபோல் பண்பாட்டின்வழி விளக்க வேண்டிய மற்றொன்று மூவிடப்பெயர்கள். உன், என், உங்கள், எங்கள் என்ற சொற்களைப் பயன்படுத்தம்போது பண்பாட்டுப் பின்னணியை உணர்ந்து பயன்படுத்த வேண்டும். வயதான மூத்தவர்களைக் குறிப்பிடும்போது எங்கள், உங்கள் என்னும் பன்மை வடிவத்தை மரியாதை காரணமாகப் பயன்படுத்த வேண்டும். எங்கள் அப்பா, எங்கள் அண்ணன் என்றும் வயது ஒத்தவர்களையும் வயது குறைந்தவர்களையும் குறிப்பிடும்போது என் தம்பி என் நண்பன் என்றும் குறிப்பிட வேண்டும்.

இதுபோன்றே ஊர், நாடு, வீடு முதலிய சொற்களுக்கும் எங்கள் என்ற அடைமொழியைப் பயன்படுத்த வேண்டும். எங்கள் வீடு, எங்கள் ஊர், எங்கள் நாடு என்றே கூற வேண்டும். இதற்குக் காரணம் மரியாதை கிடையாது. கூட்டுரிமையே (Collective Possession) காரணமாகும். இவையும் பண்பாட்டுக் கூறுகளின் நிழலாட்டத்தில் பிறந்தவைதான். இங்கு நாம் முன்னிலையாரை விலக்கிய தன்மை பன்மை வந்துள்ளதைக் காணமுடிகிறது. “நாம் அனைவரும் சிங்கப்பூரர்” என்பதில் நாம் என்பது முன்னிலையாரை உள்ளடக்கிய தன்மை பன்மை ஆகும்.

பண்பாட்டின் வழி உறவுப்பெயர்களை அறிமுகப்படுத்தல்

பண்பாட்டுக் கூறுகளில் முதன்மையான இடத்தைப் பெறுவது உறவுப் பெயர்கள். இவ்வுறவுப் பெயர்களை விளக்கும்போது பண்பாட்டின் அடிப்படையிலேயே விளக்க வேண்டியுள்ளது. தமிழில் அப்பாவுடன் பிறந்த ஆண்களையும், அம்மாவுடன் பிறந்த ஆண்களையும் வேறுபடுத்திக் காட்டும் வகையில் உறவுப் பெயர்கள் அமைந்துளள்ன, அப்பாவுடன் பிறந்தவர்களைப் பெரியப்பா என்றோ சிற்றப்பா என்றோ அவர்களின் வயதிற்கேற்பக் கூறுகிறோம். அம்மாவுடன் பிறந்தவர்களை மாமா என்கிறோம். ஆனால் ஆங்கிலத்தில் இந்த வேறுபாடின்றி Uncle என்றே அழைக்கின்றோம். உறவுப் பெயர்களைக் கற்பிக்கும்போது பண்பாட்டின்வழிக் கற்பித்தாலே அதன் பொருள் விளங்கும்.

பண்பாட்டின்வழிச் சொல்வளத்தைப் பெருக்குதல்

இன்று நம்நாட்டுக் கல்விக்கொள்கையில் அதிகமாகப் பேசப்படுவது குறைவான கற்பித்தலும் நிறைவான கற்றலும் (Teach less Learn more) என்னும் கூற்றாகும். பண்பாட்டின்வழி மொழியைக் கற்பிக்கும்போது இந்த அணுகுமுறையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்? மொழி என்பது தேவையைக் கருதி வளரக்கூடிய ஒரு கருத்துப் பரிமாற்ற வாகனம். காலத்திற்கும், தேவைக்கும், இடத்திற்கும், சூழலுக்கும் தக்கவாறு இவ்வாகனம் தன் உருவத்தையும், வேகத்தையும் மாற்றிக்கொள்கிறது. இது போலவே ஆசிரியர்களும் தேவை, சூழல் முதலியவற்றின் அடிப்படையில் மொழி கற்பித்தலில் மாற்றத்தைச் சேர்க்க வேண்டும்.

மாணவர்கள், ஒரு தமிழ்த் திருமணத்தை நேரிடையாகக் காண்பதன் மூலமோ ஒளிப்பதிவு நாடாவில் பார்ப்பதன் மூலமோ பல மணி நேரம் பாடம் நடத்திப் புரிய வைக்கும் ஒன்றை ஒரு சில மணிகளில் புரிய வைக்கலாம். அன்றியும் இப்பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகிய திருமணச் சடங்கின் மூலம் அவன் நிறைய சொற்களைத் தெரிந்துகொள்கிறான். எடுத்துக்காட்டுக்கு ஒரு திருமண மண்டபத்தில் நுழைந்து வருவோமே.

வாசலில் வரவேற்பது சந்தனம், குங்கும், பன்னீர் செம்பு, பன்னீர், பூ, மிட்டாய் முதலியன. திருமண மண்டபத்தின் உள்ளே அழகிய அலங்காரங்கள், வண்ண வண்ண பூக்கள், மாவிலை தோரணங்கள். - மணமேடையில் மணமேடை, மாப்பிள்ளை, பெண், அய்யர், சம்மந்தி வீட்டார், விளக்கு, அம்மி, ஒதியமரக் கிளை அல்லது அரசமரக் கிளை, அரசாணிப்பானை, யாக குண்டம், நெருப்பு, புகை, தேங்காய், பழம், பூ, மஞ்சள் அரிசி, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பட்டுவேட்டி, பட்டுத்துண்டு, பட்டுப்புடவை, தாலி. - மணமன்றத்தில்- உற்றார், உறவினர், நண்பர்கள், சிறுவர்கள். - மணச் சடங்கில் தாலி கட்டுதல், மாலை மாற்றுதல், மோதிரம் போடுதல், பாதபூசை செய்தல், அக்கினியை வலம் வருதல், மெட்டி போடுதல், கங்கணம் கட்டுதல், கங்கணம் அவிழ்த்தல். - விருந்தில் வாழைஇலை, பிரியாணி, குருமா, வடை, பாயாசம், பொரியல், பச்சடி, ஊறுகாய், அப்பளம், தயிர். - மற்றும் அன்பளிப்புகள், மொய் கொடுத்தல், மணமக்களை வாழ்த்துதல், புகைப்படக்காரர், ஒளிப்பதிவு படம் எடுப்பவர் என்று குறைந்தது ஐம்பதுக்கும் மேற்பட்ட சொற்களை எளிதில் பொருள் புரியும்படியும் மனத்தில் நிற்கும் வண்ணமும் அறியச் செய்யலாம். இவ்வாறு பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவரும்போது சொல்வளம் பெருகுகிறது. பண்பாடு அறியப்படுகிறது. மொழியும் கைவரப் பெறுகிறது.

நம் சிங்கை மாணவர்களுக்குத் தமிழ்மொழியில் பெரும் தடையாக இருப்பனவற்றுள் ஒன்று எந்தெந்தச் பொருள்களுக்கு என்னென்ன பெயர்கள் என்பது தெரியாமல் இருப்பது; பொதுவாகச் சொல்வளம் குறைவாக இருப்பது. இதனை நீக்கப் பண்பாட்டுக் கூறுகளோடு தொடர்புடைய பல நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச்செல்லலாம்; அல்லது ஒளிப்பட நாடாவில் அவற்றைக் காண்பிக்கலாம். இவற்றின் வழி சொல்வளம் பெருகும். ஒரு விருந்துக்குச் செல்லும்போதும் சமையல் பொருள்களைக் கவனிக்கும்போதும் சமைக்கும் முறையை அறியும்போதும் நிறைய சொற்களைத் தெரிந்துகொள்ள வாய்ப்புக் கிடைக்கின்றது.

பண்பாட்டு விழுமியங்களைக் (values) கற்பித்தல்

சிங்கையில் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கு இருக்கக்கூடிய மிகப் பெரிய இரு பொறுப்புகளுள் ஒன்று மொழியைக் கற்றுக்கொடுத்தல், மற்றொன்று தமிழ்ப் பண்பாட்டை அறிவுறுத்தல். இவ்விரு பணிகளைச் செவ்வனே செய்யும்போதே நம் மாணவர்களைத் தமிழ்மொழியில் சிறந்தவர்களாக உருவாக்க முடியும். நம் பண்பாட்டில் புதைந்து கிடக்கும் விழுமியங்களைத் தெரியப்படுத்துவது ஆசிரியர்களின் கடமை.

எடுத்துக்காட்டுக்கு நாம் சமைக்கும் பொருள்களில் எவ்வளவு மருத்துவ குணம் இருக்கின்றது என்பதைத் தெரியப்படுத்துவது. அண்மையில் சிங்கப்பூரில் ஏற்பட்ட சார்ஸ் நோயின்போது ரச உணவு சாப்பிடாதவர்களும் அதனைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டதைக் கேள்வியுற்றோம். இதற்குக் காரணம் நாம் வைக்கும் ரசத்தில் சீரகம், பூண்டு, மிளகு, மஞ்சள் தூள், கடுகு, புளி முதலியன சேர்வதுண்டு. இவற்றுள் சீரகம் தன்பெயருக்கு ஏற்ப (சீர் + அகம்) உடலைச் சீராக வைத்துக்கொள்வதில் உதவுகிறது; உடலில் உள்ள வேண்டாத கொலஸ்டிராலைக் குறைக்கிறது பூண்டு; விஷத் தன்மைகளைப் போக்குகிறது மிளகு; புற்றுநோய் வராமலும் புண்களை ஆற்றும் குணமும் கொண்டிருக்கிறது மஞ்சள்; இவ்வாறு ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியே சிறப்புக் குணங்கள் உள்ளதால்தான் சார்ஸ் வந்தபோது பலரிடம் ரசம் சிறப்பிடம் பெற்றது போலும். பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகிய நம் உணவு முறையைக் கற்பிப்பதுதன் மூலம் உடல் நலத்தையும் மன நலத்தையும் பக்குவப்படுத்துவதோடு சொல் வளத்தையும் பெருக்க முடியும்.

நம் தமிழ்ப் பண்பாட்டில் மறைந்திருக்கும் கூறுகளை மாணவனுக்கு வெளிப்படுத்தி அவனை விழிப்படையச் செய்வதும் ஆசிரியரின் கடமை. நம் பண்பாடுகளில் ஒன்று வாழை இலையில் உண்பது. அதிலும் குறிப்பாக விருந்தினர்களுக்குத் தலைவாழை இலையில் அதாவது குருத்து இலையில் உணவு பரிமாறுவது நம் பழக்கம். இந்த இலையைப் போடும்போது சிலருக்கு ஏற்படும் ஐயம், இலையின் நுனி சாப்பிடுபவரின் வலப்பக்கத்தில் இருப்பதா அல்லது இடப்பக்கத்தில் இருப்பதா? என்பது. நம்மவரில் சிலர் எப்பக்கத்தில் இருந்தால் என்ன? இலையையா சாப்பிடப்போகிறோம்? என்று கூறுவதும் உண்டு. இது விதண்டாவாதம்.

சாப்பிடுபவரின் இடப்பக்கத்தில் இலையின் நுனி இருக்க வேண்டும். அதாவது வலப்பக்கத்தில் இலையின் வெட்டிய பகுதி இருக்க வேண்டும். இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. வாழை மரத்திலிருந்து வாழை இலை வெளிவரும்போது முதலில் அதன் குறுத்துச் சுருண்டு வெளிவரும். சுருண்ட பகுதியிலிருந்து முதலில் வெளிவருவது வாழையிலையின் நடுத்தண்டிற்கு இடப் பகுதியிலிருக்கும் இலைப்பகுதி; ஒரு சில நாட்கள் கழித்து வெளிவருவது தண்டின் வலப் பகுதியிலிருக்கும் இலைப்பகுதி. முதலில் வெளிவந்த இலைப்பகுதி பின்பு வந்த இலைப் பகுதியைவிட அழுத்தமாகவும் வலிமையாகவும் இருப்பது இயல்பு. அப்பகுதியைச் சோறு பிசைந்து சாப்பிடுவதற்குப் பயன்படுத்தும்போது இலை கிழியாமல் இருக்கும். அன்றியும் சாப்பிடுபவர் இலையின் அதிகப் பரப்பளவைப் பயன்படுத்த இம்முறையில் இலையைப் போடுவதே வசதியாக இருக்கும்.

இலையின் ஈறுவாய் ஏன் வலப்பக்கம் இருக்க வேண்டும் என்பதற்கு இவை எல்லாம் காரணங்கள். (பெரியபுராணம் இதுபற்றிக் கூறுவதாவது, அப்பூதியடிகள், அப்பரடிகளை வரவேற்று விருந்து பேணும்போது, உணவுபற்மாறும் வாழை இலையை எப்படிப்போட்டார் என்பதனை, “நிகழ்ந்தஅக் கதலி நீண்ட குருத்தினை விரித்து நீரால்
மகிழ்ந்துடன் விளக்கி ஈர்வாய் வலம்பெற மரபின் வைத்தார்”
(அப்பூதியடிகள்,39)

இது போன்று நாம் பெரியோர்களுக்கு மரியாதை கொடுக்கும்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? நம்முடைய ஆடை அணிகலன்களில் எத்தனை வகைகள் உண்டு? அவற்றின் பெயர்கள் என்னென்ன? அவற்றை எப்பொழுதெல்லாம் பயன்படுத்துகிறோம்? என்பன போன்ற பண்பாட்டுக் கூறுகளை மாணவர்களுக்கு எடுத்துக் கூறுவதன் மூலம் சொல் வளமும் தமிழ்மொழி புழக்கமும் அவர்களுக்கிடையே அதிகரிக்கும்.

மரபுத்தொடர் கற்பித்தல்

காது குத்துதல் என்றால் நமக்கு இருபொருள்கள் நினைவிற்கு வரும். ஒன்று சடங்கு, மற்றொன்று பொய்கூறுதல் என்னும் மரபுத்தொடர். இந்த இரண்டிற்கும் ஒரு தொடர்பு உண்டு. காது குத்துதல் என்னும் சடங்கின் மூலம்தான் இந்த மரபுத்தொடரே உருவாயிற்று.

சிறு குழந்தையாக இருக்கும்போது மாமன் மடியில் குறுக்குமாலை தவழ அமர்ந்திருக்கும் குழந்தையிடம் எல்லோரும் அறியப் ‘பத்தர்’ காது குத்துகிறார். அதாவது முதலில் பொய் கூறுகிறார். காதுகுத்தும்போது ஊசியைத் தோட்டோடு இணைத்து அந்த ஊசியால் காதைக் குத்தித்தான் தோட்டை அணிவிக்கிறார். இருப்பினும் குழந்தை, பயப்படாமல் இருக்க அந்தக் குழந்தையிடம் எல்லோரும் அறியப் பொய் கூறுகிறார். அதாவது என் கையில் இந்தத் தோடுதான் உள்ளது; வேறொன்றும் இல்லை; நான் இந்தத் தோட்டை உன் காதில் வைப்பேன் அது அப்படியே ஒட்டிகொள்ளும் என்று கூறி மனத்தளவில் அந்தக் குழந்தையைத் தயார்படுத்துகிறார். பின் விரல்களுக்கு இடையே ஊசியை மறைத்து, பின் தோட்டோடு இணைத்து, தான் கூறியதற்கு மாறாகக் காது குத்திவிடுகிறார். அதாவது அக்குழந்தையை ஏமாற்றிவிடுகிறார்.

இங்கு உற்றார் உறவினர் பெற்றோர் முன்னிலையில் அக்குழந்தையை ஏமாற்றுகிறார். அதனால் அக்குழந்தைக்குச் சிறிது நேரம் துன்பம் ஏற்பட்டாலும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியே ஏற்படுகிறது. இந்த மரபில் வந்ததுதான் காதுகுத்துதல் என்னும் மரபுத்தொடர். இத்தொடரை “காவலரிடம் பிடிபட்ட திருடன் அந்தப் பொருளைத் தான் எடுக்கவில்லை என்று காதுகுத்தினான்” என்று பயன்படுத்துவது மிகவும் தவறு.

திராட்சைப் பழங்களை விருப்பித் தின்னும் இராமு மாமாவிற்குக் கொடுக்க வேண்டிய திராட்சைப் பழங்களில் ஒரு பகுதியைத் தின்றுவிட்டு அவை கீழே விழுந்ததால் கெட்டுப் போய்விட்டன என்று மாமாவிற்கே காது குத்தினான். இவ்வாறு பண்பாட்டின்வழி அதன் பின்னணியைக் கூறிக் கற்பிக்கும்போது மாணவர்கள் அதன் உண்மையான பொருளை அறிந்து மொழியில் சிறப்படைவர். ஒவ்வொரு மரபுத் தொடரும் நம் பண்பாடு, பயன்பாடு ஆகயவற்றின்வழித் தோன்றியதுதான் என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.

பண்பாட்டின்வழி எழுத்துத்திறனையும் சிந்தனைத் திறனையும் கற்பித்தல்

இன்றைய கற்பித்தல் கூறுகளில் ஒன்று சிந்தனைத்திறன். இதனையும் நம் பண்பாட்டின்வழிக் கற்பிக்கலாம். நமக்கே உரிய நம் பாரம்பரியக் கதைகளை எடுத்துக்கூறிச் சிந்தனைத் திறனோடு மொழியைக் கற்பிக்கலாம்.

பொற்கைப் பாண்டியன் கதையை மாணவர்களுக்கு எடுத்துக்கூறல். கதை வருமாறு. பாண்டிய மன்னர் இரவு நேரங்களில் மாறு வேடங்களில் நகர் வலம் வருவது இயல்பு. அவ்வாறு வரும்போது ஒரு வீட்டில் “நான் காசிக்குப் போனால் என்ன? நம் மன்னனின் ஆட்சியில் எவ்விதக் குறைப்பாடும் வராது; நீ தனியாக இருப்பது குறித்து எவ்விதப் பயமும் கொள்ளாமல் தைரியமாக இரு”. என்னும் உரையாடலைக் கேட்டான். கணவன் மனைவிக்கு இடையே நடந்த அந்த உரையாடலின்வழிச் செய்தியை ஒருவாறு ஊகித்துக்கொண்டு அந்த இல்லத் தலைவன் கூறிய வார்த்தைக்கு ஏற்ப அந்த இல்லத்தைப் பாதுகாத்து வந்தான்.

ஒருநாள் இரவு, தனியாக இருந்த அந்தப் பெண் வீட்டில் ஓர் ஆண்குரல் கேட்கவே யாரோ திருடன் வந்திருக்கிறான் என்று எண்ணிக் கதவைத் தட்டினான். அடுத்த கணம் “யாரது இந்த நேரத்தில்?” என்று ஒரு ஆண் குரல் பதில் தந்தது. அரசன் அந்த ஆண்மகன் அவளது கணவன்தான் என்பதை ஊகித்துக்கொண்டான். இருப்பினும் தான் கதவைத் தட்டியதால் ஏதேனும் அப்பெண்ணுக்குக் கெடுதல் வரலாம் என்று எண்ணி அத்தெருவில் உள்ள எல்லா வீட்டுக் கதவுகளையும் தட்டிவிட்டுச் சென்றான். மறுநாள் மக்கள் அரசனிடம், “நடுநிசியில் எங்கள் வீட்டுக் கதவுகளை யாரோ ஒருவன் தட்டிச் சென்றான்” என்று முறையிட்டனர். மன்னனும் அவனை நான் பிடித்து வைத்திருக்கிறேன்; அவனுக்கு என்ன தண்டனைக் கொடுக்கலாம் என்று மக்களிடம் கேட்டான். மக்களும் அவன் கையை வெட்டவேண்டும் என்று கூறினர். அதன்படியே மன்னன் தன் உடைவாளால் உடனே தன் கையை வெட்டிக்கொண்டான். பின்பு மக்கள் விவரம் அறிந்தனர். அதன் பின்னர் வெட்டிய கைக்குப் பதிலாகப் பொன்னால் கை செய்து வைத்தனர். அன்று முதல் அவன் பொற்கைப் பாண்டியன் என வழங்கப்பட்டான்.

இக்கதையின் மூலம் பல முறைகளில் மொழியைக் கற்பிக்கலாம். மன்னன் ஏன் எல்லாருடைய வீட்டுக் கதவுகளையும் தட்டினான்? மன்னன் இரவு நேரத்தில் நகர் வலம் வரக் காரணம் என்ன? மன்னன் ஏன் தானே நகர்வலம் சென்றான்? மன்னன் செய்தது சரியா? பொன்னால் கை செய்து வைத்துக்கொள்வதனால் ஏதேனும் பயன் உண்டா? இவ்வாறு பல்வேறு வினாக்களின் வழி மாணவர்களின் சிந்தனையைத் தூண்டி அவர்களை உரையாடச் செய்யலாம். சரி தவறு என்னும் அடிப்படையில் வினாக்கள் அமைத்து மொழிப்பயிற்சி கொடுக்கலாம். கேட்டல் கருத்தறிதலாக வினாக்களை அமைக்கலாம். கேட்ட கதையை மீண்டும் எழுதச் சொல்லலாம். கதையில் இடம்பெற்ற சொற்களில் சிலவற்றை வாக்கியங்களில் அமைக்கச் சொல்லலாம். இன்னும் மாணவர்களின் நிலைக்கு ஏற்பப் பல பயிற்சிகளையும் ஆசிரியர்கள வழங்கலாம்.

சில நகைச்சுவைக் கூறுகளைப் புரிந்து கொள்வதற்குக்கூடப் பண்பாட்டுக் கூறுகளை அறிந்திருத்தல் அவசியமாகும். “வீட்டில் இராமன் வெளியில் கிருஷ்ணன்” என்னும் பழமொழி முழுக்க முழுக்கப் பண்பாட்டின் அடிப்படையில் அமைந்ததாகும். இராமாயணக் கதையும் மகாபாரதக் கதையும் தெரிந்திருந்தால்தான் இத்தொடரின் பொருளை நாம் இரசிக்க முடியும்.

கற்பித்தல் என்பது ஒரு இசைக் கருவியை வாசிப்பது போன்றது. யார் வேண்டுமானாலும் இசைக் கருவியை வாசிக்கலாம். ஆனால் அக்கருவியிலிருந்து பிறக்கும் நாதம் நாம் எவ்வளவு காலம் பயிற்சி செய்திருந்தோமோ அதற்கு ஏற்பத்தான் அமையும். அதுபோலத்தான் கற்பித்தல் நடவடிக்கையும். நாம் எந்த அளவிற்குத் திட்டமிட்டு, பயிற்றுக் கருவிகளைத் தயாரித்துப் பாடம் நடத்துகின்றோமோ அதற்கேற்பத்தான் நம் கற்பித்தலும் அமையும். சரியான திட்டமிடுதலோடு போதிய உழைப்பையும் சேர்த்துப் பண்பாட்டின்வழி மொழி கற்பித்தலை நடத்தும்போது மாணவர்களும் ஆசிரியர்களும் ஒருங்கே பலன் அடைவார்கள் என்பது உறுதி.

இனிய முறையில் மொழி கற்பிப்போம்! எளிதாக அதனைக் கைவரப்பெறச் செய்வோம்!!

பொற்கை பாண்டியன் கதையைக் கேட்டபின் கீழ்க்கண்ட முறையில் பயிற்சிகள் தயாரித்துக் கொடுக்கலாம். எடுத்துக்காட்டுக்குச் சில.
அ) கீழ்க்கண்ட வாக்கியங்கள் சரியா தவறா எனக் குறிப்பிடுக.
சரி தவறு

மன்னன் மாறு வேடங்களில் எப்பொழுதும் நகர் வலம் வருவான்.

மன்னன் அன்று எல்லாருடைய வீட்டுக் கதவுகளையும் தட்டினான்.

ஆ) சரியானவற்றோடு இணைக்க

மன்னன் நகர் வலம் வருதல் கணவன் மனைவி இடையே நடைபெறுகின்ற உரையாடல் நல்லாட்சி நடைபெறுகிறது என்பதை தெரிவிக்கிறது தன்னால் ஒரு பெண்ணுக்குக் கெட்டபெயர் வரக் கூடாது வீட்டுக் கதவுகளைத் தட்டக் காரணம் தன்னைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள

இ) கோடிட்டு இடங்களை நிரப்புக.

பாண்டியன் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக ----------------------- . மன்னன் நாட்டின் நிலையை அறிந்துகொள்ள இரவு நேரங்களில் ------------வருவான். மன்னன் நீதி -------------------- ஆட்சியை நடத்தி வந்தான்.
ஈ) கீழ்க்கண்ட சொற்களை வாக்கியங்களில் அமைக்க
இயல்பு உரையாடல் ஆண்மகன் தண்டனை வாளால்
உ) கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை அளிக்க.
மன்னன் ஏன் எல்லருடைய வீட்டுக் கதவுகளையும் தட்டினான்? மன்னன் இரவு நேரத்தில் நகர் வலம் வரக் காரணம் என்ன? மன்னன் ஏன் தானே நகர்வலம் சென்றான்? மன்னன் தன்னைத் தண்டித்துக்கொண்டது சரியா? பொன்னால் கை செய்து வைத்துக்கொள்வதனால் ஏதேனும் பயன் உண்டா? மக்கள் முறையிடும்போது நீ பொற்கை பாண்டியன் இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பாய்?

0 comments: