Apr 30, 2008

தமிழ்மொழிப்பாட வகுப்புகளில் படிநிலை வளர்ச்சிகள்

உலகில் பல்வேறு நாடுகளில் தமிழ்மொழி பேசப்படுகிறது; கற்பிக்கப்படுகிறது. ஆனால் எல்லா நாடுகளிலும் கற்பித்தல் முறை ஒன்று போல் இல்லை. நாட்டுக்கு நாடு, இடத்திற்கு இடம், ஆசிரியருக்கு ஆசிரியருக்கு இம்மொழிக் கற்பித்தல் வேறுபடுகிறது. அவ்வகையில் எத்தனையோ அணுகுமுறைகளின் அடிப்படையில் தமிழ்மொழி கற்பிக்கப்பட்டாலும் கற்பிக்கும் முறையில் இருக்கும் அணுகுமுறைகளுக்கு ஏற்பக் கற்றல் கற்பித்தல் திறன்கள் வேறுபடுகின்றன. இதனை ஆய்வுமுறையில் ஆராய்ந்து கருத்துகளை வெளிப்படுத்தி உள்ளவர்கள் வெகு சிலரே. வகுப்பறையில் கற்பிக்கும் கூறுகளை எத்தனையோ விதமாக ஆய்வு செய்யலாம்; இருப்பினும் நாம் இங்குப் பார்க்க இருப்பது ஆசிரியர் கற்பிக்கும்போது படிநிலை வளர்ச்சிகளில் ஏற்படும் மாற்றங்கள் எத்தகு கற்றல் கற்பித்தல் விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதையே ஆகும்.

படிநிலை வளர்ச்சி என்றால், வகுப்பறையில் கற்றல் நடைபெறுவதற்கு ஏற்ற வகையில் கற்பித்தல் முறைகளில் ஒரு குறிப்பிட்ட கால அளவு நடைபெறும் ஒரு நடவடிக்கை. அதாவது ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையிலிருந்து மற்றொரு நடவடிக்கைக்கு மாறுதல் ஆகும். இத்தகைய பல நடவடிக்கைகள் சேர்ந்ததுதான் ஒரு பாடம். பல பாடங்கள் சேர்ந்து அமைவதுதான் ஒரு கருப்பொருளை ஒட்டிய ஒரு தொகுதி. கற்றல் கற்பித்தலில் முக்கியமானதாகக் கருப்படும் இந்த படிநிலை வளர்ச்சி ஏன் வகுப்பறைகளில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்றால் கற்றல் கற்பித்தல் சுமூகமாக நடைபெறுவதற்கே ஆகும்.

ஆசிரியர்கள் வகுப்புகளில் பாடம் நடத்துகின்றபோது பத்து விதமான படிநிலை வளர்ச்சிகளில் ஈடுபடுகிறார்கள் என்று பேராசிரியர்கள் Luke, Freebody, Cazden, Lin ஆகியோர் கூறுகின்றனர். இவர்கள் பல ஆய்வாளர்களின் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு பல வகுப்புகளை நேரிடையாகப் பார்த்து இந்த பத்து முறைகளை உருவாக்கியுள்ளனர். பத்து வகை படிநிலை வளர்ச்சிகள் வருமாறு.

1. ஆசிரியரின் விரிவுரை (தான் பாட்டில் பேசிக்கொண்டு போகும் போக்கில் அமைந்த விரிவுரை) {Whole Class Lecture (Monologues)}

ஆசிரியர் தான்பாட்டில் பாடம் நடத்திக்கொண்டு போவது. மாணவர்களோடு எவ்விதமான கலந்துரையாடலிலும் ஈடுபடுவதோ கலந்துரையாடல் வளர்வதற்கு இடம் கொடுப்பதோ கிடையாது. கிட்டதட்ட ஆசிரியரே பேசிக்கொண்டு போகும் போக்கு. மாணவர்களின் புரிந்துணர்வுக்காகவோ வினாக்களுக்காகவோ பதில்களுக்காகவோ காத்திராமல் பாடத்தை நடத்திக்கொண்டு போகும் நிலை.

2. வகுப்பறை கலந்துரையாடல் (Whole Class Elicitation and Discussion)

ஆசிரியர் மாணவர்களிடம் கீழ்நிலை மேல்நிலை வினாக்களைக் கேட்டல்; மாணவர்கள் நீண்டநேரம் பேச அனுமதித்தல்; பல்வேறு நிலைகளில் மாணவர்கள் உரையாட வாய்ப்பளித்தல்; மாணவர்கள் பேசுவதை வெண்பலகையிலோ வேறு குறிப்புகளின் வழியோ பதிவு செய்தல்; எவ்வித தடையும் இல்லாத உரையாடலுக்கு வழிவிடுதல்; மாணவர்கள் தங்களுக்கிடையே உரையாடலை வளர்த்துக்கொள்ளல்; அதற்கேற்பக் கருத்துகளைக் கூறுதல்; ஆசிரியர் சில வினாக்களின் வழி உரையாடலைத் திசை திருப்புதல்.

3. கேள்வி கேட்டு விடைகளைச் சரிபார்த்தல் {Whole Class Answer Checking (Initiate, Response, Evaluate)}

ஆசிரியர் கேள்வி கேட்டல், மாணவர்கள் பதில் கூறுதல், சரிபார்த்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர் தொடர்ச்சியாகப் பல வினாக்களைக் கேட்டு மாணவர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட பதிலைப் பெறுதல்.

4. ஒட்டு மொத்தமாக எல்லோரும் சேர்ந்து திரும்பத் திரும்பக் கூறுதல், அல்லது சேர்ந்து படித்தல் (Choral Repetition and / or Oral reading)

ஒட்டு மொத்தமாக எல்லோரும் சேர்ந்து திரும்பத் திரும்பக் கூறுதல், அல்லது சேர்ந்து படித்தல், பாடுதல், சேர்ந்து பதில் கூறுதல், உரக்கச் சத்தமாகப் படித்தல்
5. தனி வேலை (Individual seatwork)

மாணவர்கள் தாங்கள் சொந்தமாக வேலையைச் செய்தல். எடுத்துக்காட்டுக்கு மெளனமாக வாசித்தல், கட்டுரை அல்லது கருத்தறிதல் பகுதியைச் செய்தல்

6. சிறு குழு வேலை (Small group Work)

மாணவர்கள் சிறு சிறு குழுவாக இருந்து வேலை செய்தல். எடுத்துக்காட்டாக கட்டுரை, கருத்தறிதல் செய்யக் கருத்துகளைத் தயாரித்தல், மொழிப்பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.

7. சிறு தேர்வு (Test taking)

மாணவர்கள் வகுப்புத் தேர்வு அல்லது தேர்வு எழுதுதல்

8. ஒட்டுமொத்த வகுப்பறை நடவடிக்கைகள் அல்லது விளக்கக் காட்சிகள்
(Whole Class Demonstration or Activity)

வகுப்பறையில் நடைபெறும் ஒரு விளையாட்டை ஆசிரியர் வழிநடத்துதல்; அல்லது விளையாட்டு நடைபெறத் தூண்டுதல்; ஒரு விளையாட்டை விளையாடிக் காட்டல்; அறிவியல் சோதனைகளைகச் செய்து காட்டல்; இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்களை ஈடுபடுத்திக் காட்டல். உதாரணமாக ஆசிரியர் மாணவர்களை குழு குழுவாகப் பாகம் ஏற்று நடித்துக் காட்டக் கூறுதல், குழுவாகக் கதை கூறச் சொல்லுதல், வகுப்பு முழுவதையும் வாசித்தல், பாடுதல், முதலிய பல நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல்.

9. மாணவர்கள் படைத்தல் (student demonstrations / presentations)

மாணவர்கள் திரும்பத் திரும்பக் கூறுதல்; வெண்பலகையில் எழுதிக்காட்டல்; எழுதியதை வைத்துப் பேசுதல்; மாணவர்கள் தாங்கள் எழுதியதை ஒளி ஊடுருவிக் கருவியின் மூலம் படைத்தல்; அனுபவத்தின் மூலம் படைத்தல். வாசித்தல், பாடுதல், கதை கூறுதல், பாகம் ஏற்று நடித்தல்,

10. சோதனைக்கூடச் சோதைனை முறை/ செய்முறை விளக்கம் (Laboratory/ Hands-on Experiments)

மேற்கண்ட பத்துவகையான படிநிலை வளர்ச்சிகளும் தமிழ் வகுப்புகளில் எவ்வாறு இடம்பெறுகின்ற என்பதைக் கண்டறியும் பொருட்டுப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் வகுப்புகளில் ஆய்வு செய்யப்பட்டது. வெவ்வேறு ஆசிரியர்க்ள நடத்திய 21 தொகுதிகள் அடங்கிய 81 வகுப்புகள் ஆய்வுக்கு உட்பட்டன. இந்த 81 வகுப்புகளில் மொத்தமாக 357 படிநிலை வளர்ச்சிகள் இடம்பெற்றன. இவற்றுள் சோதனைக்கூடச் சோதனைமுறைகளைத் தவிர்த்த ஏனைய ஒன்பது படிநிலை வளர்ச்சிகளும் இடம்பெற்றன. அவை
Whole Class Answer Checking (IRE) 25.1 % Whole class Elicitation and discussion 17.7 % Small group work 16.4 % Individual seatwork-14.1 % Whole Class Lecture (Monologues) 9.9 % Student demonstration/presentation-8.4 % Choral Repetition and / or Oral reading-4.3 % Whole class demonstration or Activity-3.1 % Test taking 1.0 %
இருப்பினும் அதிகமாக இடம்பெற்ற படிநிலை வளர்ச்சிகள் மூன்றே.

பொதுவாகத் தமிழ் வகுப்புகளில் படிநிலை வளர்ச்சிகள் படிப் படியாக இடம்பெற்றுள்ளதையும் பலவகையான படிநிலை வளர்ச்சிகள் விரவி வந்துள்ளதையும் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாகப் புராணக்கதைகள் என்னும் தலைப்பில் அமைந்த பாடத்தில் முதலில் மெளன வாசிப்பும் (individual seatwork) தொடர்ந்து உரக்க வாசித்தலும் (Oral Reading) இடம்பெற்றன. அவற்றைத் தொடர்ந்து பனுவலைப் பற்றிய விளக்கமும் கருத்தறிதல் வினாக்களுக்குரிய விளக்கமும் (IRE) இடம்பெற்றன. தொடர்ந்து பனுவலைப் பற்றிய கலந்துரையாடலும் (Elicitation and discussion) பின்பு பனுவலைப் போல் வேறு ஒரு கதை உருவாக்கமும் (Individual seatwork) இடம்பெற்றன. இவ்வாறு இந்தப் பாடத்தில் ஐந்து படிநிலைகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஒவ்வொரு படிநிலைகளும் எத்தனை நிமிடங்கள் இடம்பெற்றுள்ளன என்று கணக்கிடப்பெற்றுக் குறிப்பு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

காரண காரியங்களோடு வளரச்சி அடையும் படிநிலைகள்
தமிழ்பாட வகுப்புகளில் ஒரு படிநிலை வளர்ச்சிக்கும் அடுத்த படிநிலை வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பு ஏற்புடையதாகக் காரண காரியங்களோடு தொடர்புடையதாக அமைந்துள்ளன. அதனோடு மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் பயிற்சிகளும் காரண காரியங்களுக்கு உட்பட்டே அமைகின்றன. எடுத்துக்காட்டுக்குச் சிங்கப்பூர் வரலாறு என்னும் பாடத்தில் முதலில் மெளன வாசிப்பும் தொடர்ந்து உரக்க வாசித்தலும் அடுத்துப் பாடத்தைப் பற்றிய விளக்கம் இடம்பெற்றன. தொடர்ந்து கருத்தறிதல் வினாக்களுக்கு விடைகள் கண்டறியப்பெற்றன. அதனைத் தொடர்ந்து இலக்கணக் கூறுகளும் பாடக் கருப்பொருளின் அடிப்படையில் பயிற்சியும் இடம்பெற்றன. இவை அனைத்தும் கருப்பொருள் அடிப்படையில் அமைந்திருந்தன.

மோசமான படிநிலை வளர்ச்சியில் அமைந்த ஒரு பாடம்.
ஒரு நல்ல படிநிலை வளர்ச்சியைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமென்றால் எந்தெந்தத் தவறான கூறுகள் அவற்றில் இடம்பெறக் கூடாது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

விழாக்கள் என்னும் தலைப்பில் அமைந்த ஒரு பாடம். விழாக்கள் என்னும் தலைப்பில் அமைந்த ஒரு கருத்தறிதல் பகுதியை ஆசிரியர் முதலில் நடத்தினார். தொடர்ந்து விழாக்காலங்களில் அணியப்படும் ஆடைகளைப் பற்றி ஆசிரியர் விளக்கம் கொடுத்தார். அடுத்த வகுப்பில் ஆசிரியர் எழுவாய் பயனிலை செயப்படுப்பொருள் பாடம் நடத்தினார். இந்த இலக்கணப்பாடம் கருப்பொருளை ஒட்டி அமையாததோடு முதல் நாள் நடத்திய விழாக்கால ஆடைகளோடும் தொடர்புடையதாக அமையவில்லை. வகுப்பு முடியப் பத்து நிமிடங்கள் இருக்கின்ற வேளையில் ஆசிரியர் சிங்கப்பூரில் கொண்டாடப்படும் விழாக்கள் தொடர்பாகப் பேசச் சொன்னார். இத்தகு படிநிலை வளர்ச்சிகள் கருப்பொருளின் அடிப்படையில் பார்க்கும்போது காரண காரியங்களோடு தொடர்புடையதாக அமையவில்லை.

தொடர்பற்ற படிநிலை வளர்ச்சிகளால் ஏற்படும் சிக்கல்கள்
தயார்நிலையில் வரச்சொன்ன தலைப்பை ஒட்டித்தான் பாடம் நடத்துவார் என்னும் எண்ணத்தில் வந்த மாணவர்களின் எதிர்பார்ப்புகள் பொய்யாக்கப்படுகின்றன. அவர்களுடைய ஆர்வம் இதனால் சிதைகிறது. அதோடு மாணவர்கள் சற்றும் எதிர்பார்க்காத வேளையில், போதுமான நேரம் இல்லாதபோது தயார் நிலையில் வரச்சொன்னத் தலைப்புத் தொடர்பாகப் பாடத்தை ஆசிரியர் தொடர்கின்றார். இதனால் மாணவர்கள் முழுமையாக அப்பாடத்தில் இடம்பெற இயலாமல் போய்விடுகின்றது. மேலும் பாடத்திலும் ஆர்வம் குறைகின்றது. மாணவர்கள் தயாரித்து வந்த செய்திகளை வகுப்பறையில் முறையாகப் பரிமாறிக்கொள்ள முடியவில்லை. ஆசிரியரும் அவற்றை முறையாக ஏற்றுப் பாரட்டவில்லை. இதனால் மாணவர்கள் கற்றலில் ஊக்கம் இழக்கின்றனர்.

படிநிலை வளர்ச்சிகளின் கால அளவு

ஆய்வுக்குட்பட்ட பாடங்களில் காணப்பட்ட 357 படிநிலைகளில் 123 படிநிலைகள் ஐந்து நிமிடமோ அதற்குக் குறைவாகவோ அமைந்துள்ளன. குறிப்பாகத் “தனி வேலை” என்னும் படிநிலையில் 33.4% அளவு ஐந்து நிமிடங்களோ அதற்குக் குறைவாகவோ அமைந்துள்ளது. 35.3% அளவு ஐந்து நிமிடத்திலிருந்து பத்து நிமிடங்களுக்குள்ளாக அமைந்துள்ளது. “சிறு குழுவேலை” என்னும் படிநிலைவளர்ச்சி 27.8% ஐந்து நிமிடங்கள் அதற்குக் குறைவாகவும் 46.4 % ஐந்து நிமிடத்திலிருந்து பத்து நிமிடங்களுக்கு உள்ளாகவும் அமைந்துள்ளன.

எடுத்துக்காட்டிற்கு (படிநிலை வளர்ச்சி காரண காரியத் தொடர்போடு அமைந்திருந்தாலும்) ஒருநிலையிலிருந்து அடுத்த நிலைக்குத் துரிதமாகச் செல்லும் நிலை பின்வருமாறு உள்ளது.
பாடத்தலைப்பு உறவுகள்.

படி 1

ஆசிரியர் மாணவர்களைக் குழுக்களாகப் பிரிந்துக்கொண்டு பாடத்தில் உள்ள படத்தைப் பற்றிக் கலந்துரையாடச் சொல்லல் (5 நிமிடங்கள்)

படி2.

ஒவ்வொரு குழுவும் படங்களைப் பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை வகுப்பறையில் படைத்துக் காட்டுதல் (5 நிமிடங்கள்)

படி3.

ஆசிரியர் படங்களைப் பற்றி இரண்டு நிமிடங்கள் பேசுதல். அதே வேளையில் மாணவர்களை வகுப்பின் முன்வந்து தனக்கு ஏற்பட்ட ஒரு மறக்க முடியாத சம்பவத்தைப் பற்றிப் படத்தை ஒட்டிப் பேசச் சொல்லுதல் (5 நிமிடங்கள்)
இங்கு மூன்று நிமிடங்களில் மாணவர்களுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத ஒரு சம்பவத்தை ஆசிரியர் பேசச் சொல்லுகிறார்.

இவ்வாறு படிநிலை வளர்ச்சிகள் ஒரு படிநிலையிலிருந்து அடுத்த படிநிலைக்கு மிக விரைவாகப் போகும் போக்கினைக் காட்டுகிறது. இந்நிலையினால் மாணவர்கள் தாங்கள் ஒருநிலையில் ஈடுபட்டிருக்கும்போது அல்லது இருக்கும்போது அடுத்த நிலைக்கு வெகு விரைவாகப் போகத் தள்ளப்படுகிறார்கள். மேலும் தாங்கள் எந்தப் படிநிலையில் அல்லது எந்தச் செயலில் ஈடுபட்டு இருந்தார்களோ அதனைச் சரிவரச் செய்துமுடிக்க முடியாமலும் புரிந்துகொள்ள முடியாமலும் போகிறார்கள் என்பதை ஆய்வு காட்டுகிறது. ஓரு சீரான கற்றலுக்கு இது இடையூறாக அமைந்து விடுகிறது. சிங்கப்பூர்ச் சூழலில் தமிழ்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் வெறும் கருத்துகளை மட்டும் அறிவு பெறுவதற்காகக் கூறிக்கொண்டு போகுதல் சரியல்ல. மாணவர்களின் மொழி வளர்ச்சி அடையவும் நேரம் கொடுத்துக் கற்பிக்க வேண்டியது அவசியம். மாணவர்கள் பேச எழுத அவர்களுக்குப் போதிய நேரம் அவசியமாகும்.

இவ்வாறு ஆசிரியர்கள் விரைவாகப் பாடத்தை நடத்துவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. வகுப்பைக் காலதாமதமாக ஆரம்பித்து முன்னதாகவே முடிக்க வேண்டிய சூழல். அனைத்துத் தமிழ் மாணவர்களும் ஒரே நேரத்தில் ஒன்றாக வந்து சேராமல் ஒருவர் இருவராக வகுப்பிற்கு வருதல். பாடத்திட்டத்தைக் குறிப்பிட்ட கால அளவுக்குள் முடிக்கவேண்டிய கட்டாயம். கணினி இணைப்புக் கிடைப்பதில் ஏற்படக்கூடிய காலதாமதம். மாணவர்களின் மெத்தனப்போக்கு.

தமிழ் வகுப்புகளில் இடம்பெறும் படிநிலை வளர்ச்சிகளைப் பார்க்கும்போது தமிழாசிரியர்கள் மூன்று வகையான படிநிலை வளர்ச்சிகளை அதிகமாகக் கையாளுவதைப் பார்க்க முடிகிறது. அவை
Whole Class Answer Checking (IRE) 25.1 % Small group work 16.4 % Whole class Elicitation and discussion 17.7 %

1. Whole Class Answer Checking (IRE) 25.1%

தமிழாசிரியர்களிடையே பிரபலமாக இருக்கும் படிநிலை இது. அதாவது மொத்தம் 357 படிநிலை வளர்ச்சிகளில் 90 முறை (25.1%) இது தமிழாசிரியர்களால் கையாளப்பட்டுள்ளது. இருப்பினும் அனேக நேரங்களில் இப்படிநிலை வளர்ச்சி சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை.

ஆசிரியர் மாணவர்களிடம் வினாக்களைக் கேட்கின்ற பொழுதும் மாணவர்கள் பதில் கூற முயற்சி செய்கின்ற பொழுதும் ஆசிரியர் போதுமான நேரம் மாணவர்களுக்குக் கொடுப்பதில்லை. ஆசிரியர் தொடர்ச்சியாகப் பல வினாக்களைக் கேட்டு விடைகளை மாணவரிடமிருந்து பெற முயற்சி செய்தாலும் போதுமான நேரம் கொடுக்காததினால் மாணவர்கள் விடை கூற இயலாது போய்விடுகிறது. மாணவர்கள் பதில் கூறச் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற பொழுதே ஆசிரியர் விடைகளைத் தாமே கூறிவிடுகின்றார். அல்லது வேறொரு மாணவர்க்கு அந்த வாய்ப்பினை வழங்கிவிடுகின்றார். இதனால் பின்தங்கிய மாணவனுக்குப் பதிலளிக்க வாய்பில்லாமல் செய்து விடுகின்றார்; அல்லது மீண்டும் மீண்டும் கெட்டிக்கார மாணவனுக்கே அந்த வாய்ப்பினை வழங்கி அவனிடமிருந்து மட்டுமே பதிலைப் பெறுகிறார். இதனால் வகுப்பறையில் சராசரி அல்லது சராசரிக்குக் கீழ் உள்ள மாணவர்கள் பாடங்களில் முழுமையாகப் பங்குகொள்ள முடியாத நிலை ஏற்படுகின்றது.

2. Whole Class elicitation and discussion 17.7%

தமிழாசிரியர்கள் மத்தியில் அடுத்த நிலையில் பயன்படுத்தப்பட்டுள்ள படிநிலை “வகுப்பறை கலந்துரையாடல்”. ஆய்வுக்குட்பட்ட பகுதியைப் பார்க்கும்போது இந்தப் படிநிலை வளர்ச்சி 63 (17.7%) முறை இடம்பெற்றுள்ளது.

ஆசிரியர் மாணவர்களிடம் வினாக்களைக் கேட்கின்ற பொழுது அவற்றுள் 68 விழுக்காட்டு வினாக்கள் கீழ்நிலை வினாக்களாக அமைகின்றன. 32 விழுக்காட்டு அளவு மேல்நிலை வினாக்களாக இருந்தாலும் பதில் கூறும் மாணவர்களுள் 61.3 விழுக்காட்டினர் மிகச் சுருக்கமாக ஓரிரு சொற்களில் தங்கள் பதில்களைத் தருகின்றனர்; அல்லது பதிலே கூறமால் இருந்து விடுகின்றனர். இப்படி மேல் நிலை வினாக்கள் கேட்காததினாலும் பதில்கள் விரிவாக இல்லாததினாலும் வகுப்பறையில் கலந்துரையாடல்கள் நிகழ்வது குறைந்து காணப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் வகுப்பறை ஆசிரிரியர் மையமாகவே (Teacher Centered) விளங்குகிறது. மாணவர்கள் மையமாக (Student Centered) விளங்கவில்லை.

பொதுவாக ஆசிரியர்களால் கீழ்நிலை வினாக்கள் கேட்கப்படுகின்றதனாலும் மேல்நிலை வினாக்களில் மாணவர்கள் அதிக ஈடுபாடு காட்டாததினாலும் வகுப்பறையில் கலந்துரையாடல் அதிகம் நடைபெறவில்லை. இதற்கு மாணவர்களுக்கு விடை தெரியாதது மட்டும் ஒரு காரணம் அல்ல. மாணவர்கள் தமிழ் மொழியைத் தைரியமாகப் பேச முன்வராததும் ஒரு காரணமாகும். மாணவர்களிடம் மொழி வளம் இல்லாததும், தன்னம்பிக்கை இல்லாததும் மேலும் சில காரணங்களாக அமைகின்றன. அடுத்துத் தொடர்ச்சியாகத் தமிழில் பேச அவர்களால் இயலவில்லை அல்லது விரும்பவில்லை.

சிற்சில இடங்களில் ஆங்கிலம் கலந்து பேசுவதை அல்லது தமிழ்ச்சொற்கள் தெரியாதபொழுது ஆங்கிலச்சொற்கள் கலந்து பேசுவதை ஆசிரியர் அனுமதித்தால் இந்த உரையாடல் நீள வாய்ப்பு உள்ளது. அதற்காக ஆங்கிலம் கலந்து பேசுவதை முழுமையாக அனுமதிக்கக் கூடாது. இடம் பொருள் ஏவல் அறிந்து கொடுக்கப்படும் தலைப்பு எதைப் பற்றியது என்பதை அறிந்து ஆசிரியர் இதனை முடிவு செய்தல் வேண்டும். இது தமிழ் பேசாது இருக்கும் மாணவர்களுக்குக் குறைந்த பட்சம் ஆங்கிலம் கலந்தாவது தமிழ் பேச வாய்ப்பு அளிக்கும்.

3. Small group work 16.4%

ஆய்வுக்குட்பட்ட பகுதியைப் பார்க்கும்போது இந்தக் “குழுவேலை” படிநிலை 59 (16.4%) முறை இடம்பெற்று மூன்றாம் நிலையில் உள்ளது. இருப்பினும் இப்படிநிலை வளர்ச்சி குறிப்பிட்டுச் சொல்லும் அளவு திறமையாகக் கையாளப்படவில்லை.

குழு நிலை வளர்ச்சியில் பல்வேறு கூறுகளில் ஆசிரியர் கவனம் செலுத்த வேண்டும். ஒரு குழுவில் அனைத்துத் தர நிலையிலும் உள்ள மாணவர்கள் இடம்பெற வேண்டும். அதாவது கெட்டிக்கார மாணவர்கள் சராசரி மாணவர்கள் சராசரிக்குக கீழ் உள்ள மாணவர்கள் என்று அமைய வேண்டும். கெட்டிக்கார மாணவர்களை ஒரு குழுவிலும் பின்தங்கிய மாணவர்களை ஒரு குழுவிலும் அமைப்பது சரியல்ல. அடுத்து ஒவ்வொரு குழுவிலும் சுமார் மூன்றிலிருந்து ஐந்து எண்ணிக்கைகளுள் மாணவர்கள் இடம்பெறுவது நல்லது. இது மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும்.

குழுக்கள் அமர்ந்து நடவடிக்கைகளில் ஈடும்படும்போது அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசிக்கொள்ளத்தக்க வகையில் அமர்தல் வேண்டும். அதற்கு ஏற்றார்போல் நாற்காலிகளை நகர்த்திக் கொள்ளவது அவசியம். குழு வேலைகளுக்கு நடவடிக்கைகளுக்கு ஏற்ப நேரம் ஓதுக்குதல் வேண்டும்.
மேலும் குழுவிலிருந்து ஓரிரு மாணவர்களையே மீண்டும் மீண்டும் கூப்பிட்டுக் குழு வேலை தொடர்பான செயல்களைச் செய்யச் சொல்லக்கூடாது. குழுவில் அனைத்து மாணவர்களின் பங்களிப்பும் சரிவர அமைவதல் வேண்டும். ஓரிரு மாணவர்கள் மட்டும் பங்கெடுத்துக்கொண்டு மீதமுள்ள மாணவர்கள் பங்கெடுக்காமல் இருப்பது சரியல்ல.

மேற்கண்ட கூறுகளைக் கவனத்தில்கொண்டு ஆய்வின் முடிவுகளைப் பார்க்கும்போது குழு நிலை படிவளர்ச்சியில் 31 விழுக்காட்டு அளவு மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து அமராமல் வரிசை வரிசையாக (2-3) அமர்ந்த நிலையிலேயே தங்கள் குழு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குழுவிலுள்ள மாணவர்களின் பங்களிப்புச் சரிசமமாக இருக்க வாய்ப்பில்லாமல் போயுள்ளது. இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால் போதுமான இட வசதி இருந்தும் குழு உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும்படி சரிவர அமரவில்லை. இதனால் கூடிக்கற்றல் என்னும் அணுகுமுறை இவ்வகுப்புகளில் சரிவரப் பயன்படாமல் போயுள்ளது. குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அதில் பங்கெடுத்துப் படைக்க வேண்டும் என்னும் நிலை இருந்தும் ஒவ்வொரு குழுவிலும் ஓரிருவர் மட்டுமே பங்கெடுத்துள்ளனர்.

முடிவுரை

காரண காரிய முறையில் படிநிலை வளர்ச்சிகளை அமைத்தல் வேண்டும். படிநிலைக்கு ஏற்ப மாணவர்களுக்கு நேரம் கொடுத்தல் வேண்டும். சிறு குழு வேலையில் அனைத்து மாணவர்களும் பங்கேற்கும்படி செய்தல் வேண்டும். குழுவாக அமர்ந்து பேசுவதற்கு ஏற்ப இருக்கைகளை மாற்றி அமைத்தல் வேண்டும். அறிவு வளர்ச்சியை மட்டும் நோக்கிப் பாடம் நடத்தாமல் மாணவர்களின் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் நேரம் ஒதுக்கிக் கற்பித்தல் வேண்டும்.

கற்பித்தல் என்பது ஒரு கலை அது பயிற்சியின் மூலமே செம்மையடைகின்றது. எனவே ஆசிரியர்கள் திட்டமிட்டு மாணவர்களின் நிலை உணர்ந்து கற்பிக்கும்போது சிறப்பான கற்றல் கற்பித்தல் நிகழ வாய்ப்பு உள்ளது.


தமிழ்மொழிப்பாட வகுப்புகளில் படிநிலை வளர்ச்சிகள்Instructional Phases in Tamil Language Classrooms
கட்டுரையாளர்கள்
டாக்டர் ஆ ரா சிவகுமாரன்
துணைப் பேராசிரியர்
ஆசிய மொழிகள் மற்றும் பண்பாடுகள் துறை
தேசியக் கல்விக் கழகம்
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம்

செல்வி அ சங்கீதா
ஆய்வு உதவியாளர்
ஆசிரியவியல் மற்றும் பயிற்சி குறித்த ஆய்வு மையம்
தேசியக் கல்விக் கழகம்

Apr 29, 2008

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தில் ஆய்வு முயற்சிகள் - உயர் கல்வி நிறுவனங்களின் பங்கு

உலகில் பல நாடுகளில் பேசப்படும் தமிழ்மொழி அந்தந்த நாட்டுச் சூழலுக்கு ஏற்பத் தம் இலக்கியச் செல்வத்தை வளர்த்துக்கொண்டு வருகிறது. இலக்கிய வளர்ச்சிக்கு நல்ல ஊக்குவிப்பும் தரமான ஆய்வும் உறு துணையாக அமைகின்றன. ஆய்வு என்பது பண்பட்ட மக்களின் வளர்ச்சியைக் காட்ட வல்லது. அதிலும் இலக்கிய வளர்ச்சிக்கு உயர் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் ஆய்வுகள் நல்லதொரு உரமாக அமையக் கூடியன. அவ்வகையில் சிங்கப்பூரின் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உயர் கல்வி நிறுவனங்களின் பங்கு என்ன என்பதை இனிக் காண்போம்.

உயர்கல்வி நிறுவனங்கள் என்னும் தொடர் பொதுவாகப் பல்கலைக்கழகங்கள், தொழில் நுட்பக் கல்லூரிகள் ஆகியவற்றைக் குறிக்கக் கூடியது. அப்படிப் பார்க்கையில் சிங்கப்பூரில் தேசிய பல்கலைக் கழகமும், தேசியக் கல்விக்கழகமும்தான் தமிழ் இலக்கியம் தொடர்பான ஆய்வுகளை நடத்தி வந்துள்ளன, வருகின்றன. பொதுவாகச் சிங்கப்பூரில் தமிழிலக்கிய ஆய்வு என்று குறிப்பிடும்போது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு சில கல்வி நிறுவனங்களும் சில அமைப்புகளும்தான் அவற்றை ஏற்று நடத்தி வந்துள்ளன, வருகின்றன.

கல்வி நிறுவனங்களைச் சார்ந்தவைகளுள் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகமும், தேசியக் கல்விக்கழகமும், யீசூன் தொடக்கக் கல்லூரியும் குறிப்பிடத்தக்கவையாகும். இவற்றுள் யீசூன் தொடக்கக் கல்லூரி உயர் கல்வி நிறுவனங்களின் வரிசையில் இடம்பெறாதாது. இருப்பினும் அது “புகுமுகவகுப்புக்களுக்கான தமிழ் இலக்கியக் கருத்தரங்கு” என்று கடந்த 18 ஆண்டுகளாகத் தொடர்ந்து கருத்தரங்குகளை நடத்தி வருகின்றது. எனவே அதனைத் தவிர்ப்பது சரியல்ல. ஆகையால் அதனையும் இணைத்து இத்தலைப்பை அணுகுவதே பொருத்தமாக இருக்கும்.

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய ஆய்வு முயற்சிகளில் உயர் கல்வி நிறுவனங்களின் பங்கு என்னும் இத்தலைப்பைக் கீழ்க்கண்ட உட்தலைப்புகளின் அடிப்படையில் பார்க்கலாம்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும் தமிழ் இலக்கிய ஆய்வும்
தேசியக் கல்விக்கழகமும் தமிழ் இலக்கிய ஆய்வும்
யீசூன் தொடக்கக் கல்லூரியும் தமிழ் இலக்கிய ஆய்வும்
பிற உயர்கல்வி நிறுவனங்களும் தமிழ் இலக்கிய ஆய்வும்.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகமும் தமிழ் இலக்கிய ஆய்வும்

முதலில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் தமிழ் இலக்கிய ஆய்வும் என்னும் தலைப்பில் அமைந்துள்ளவற்றைப் பார்ப்போம். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பட்டப் படிப்புக்கு என்று தனியே ஒரு பிரிவு இல்லையெனினும் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் தொடர்பான ஆய்வுகளுக்குப் பல்கலைக் கழகத்தில் இயங்கி வருகின்ற சிங்கப்பூர்ப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவை ஆரம்பத்தில் வித்திட்டது எனலாம். 1977ஆம் ஆண்டு ஏப்ரல் 9, 10 தேதிகளில் சிங்கப்பூரில் தமிழும் தமிழிலக்கியமும் என்னும் ஆய்வரங்கத்தைச் சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை கூட்டிற்று. இவ்வாய்வரங்கத்தை நடத்த முன்னின்றவர் தமிழர்களின் மீது மிகவும் பற்றுக்கொண்டு ஆய்வரங்குகள் பல நடத்திய டாக்டர் அ வீரமணி ஆவார்கள். இவரின் அரிய முயற்சியே சிங்கப்பூரில் தமிழ் தொடர்பான ஆய்வுகளுக்கு வித்திட்டது என்றால் அது மிகையாகாது. இன்னும் சொல்லப்போனால் ஆய்வரங்குகள் மட்டும் நடத்திவிட்டுச் செல்லாமல் அங்குப் படிக்கப்பட்ட கட்டுரைகள் உடனுக்குடன் புத்தகங்களாக வரவேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்து அவற்றைப் புத்தகங்களாகக் கொண்டுவந்தவர் இவர் ஆவார். “மலாயாப் பல்கலைக் கழகத்தில் அ . வீரமணி தம் பி ஏ பட்ட படிப்பின் ஒரு பாடமாக, “மலாயா- சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும் 1900-1960” என்னும் தலைப்பில் ஆய்வு செய்து 1970இல் ஒரு கட்டுரை படைத்துள்ளார். இதுவே பல்கலைக்கழக நிலையில் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் பற்றி மேற்கொண்ட முதல் ஆய்வு எனக் கருதலாம்”. (டாக்டர் திண்ணப்பன் - சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் சாதனைகளும் எதிர்காலத் திட்டங்களும், பக்கம்60)

டாக்டர் அ வீரமணியின் முயற்சியே பின்னாளில் சிங்கப்பூரில் தமிழ், தமிழர், தமிழ் இலக்கியம் தொடர்பான ஆய்வுச் சிந்தனைகளைத் தொடக்கி வைத்தது. இவர் தொகுத்து வெளியிட்ட முதல் ஆய்வரங்க மலரில் ஒன்பது கட்டுரைகள் படிக்கப்பட்டன. அவற்றுள் இரண்டு கட்டுரைகள் நேரிடையாகத் தமிழ் இலக்கியம் தொடர்புடையவையாகும். 1. சிங்கப்பூரில் தமிழ்ச் சிறுகதை என்னும் தலைப்பில் இராம கண்ணபிரானால் படைக்கப்பட்ட கட்டுரையும் 2 சிங்கப்பூரில் தமிழ் நாடகங்கள் என்னும் தலைப்பில் எஸ் எஸ் சர்மாவால் படைக்கப்பட்ட கட்டுரையும் அவையாகும்.

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் மக்கள்- தொடர்ப்புத் துறையின் - பங்கு ஒரு மதிப்பீடு என்னும் தலைப்பில் அ முருகையன் அவர்களால் படைக்கப்பட்ட கட்டுரை, வானொலி இலக்கியத் துறைக்கு ஆற்றிய பங்கினை எடுத்துக்கூறும் முகமாக அமைந்தது. தமிழர், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்க்கல்வி எனப் பல நோக்குகளில் பின்னர் இரண்டாண்டுக்கு ஒரு முறை ஏற்பாடு செய்யப்பட்டு இவ்வாய்வரங்குகள் தொடர்ந்தன.

1977ஆம் ஆண்டிலிருந்து 1989 ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஏழு ஆய்வரங்குகள் நடைபெற்றன. இக்காலக்கட்டத்தில் பேச்சுத்தமிழ், பள்ளிகளில் தமிழ், ஆலயங்கள், சமுதாயம், வர்த்தகம், தமிழர் முன்னேற்றம், இதழியல் முதலான தலைப்புகளில் மொத்தம் 93 கட்டுரைகள் படிக்கப்பட்டன. இவற்றுள் தமிழ் இலக்கியம் தொடர்பானவை 17 கட்டுரைகள் ஆகும். பல்கலைக்கழகத் தமிழர் பேரவைத் தொடர்பாக இரு ஆய்விதழ்கள் முறையே 1977, 1982 இல் வெளியிடப்பட்டன. இவ்வாய்விதழ்களில் இலக்கியம் தொடர்பாக 6 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

அ வீரமணி அவர்கள் தேசியப் பல்கலைக் கழகத்தில் பணி புரிகின்ற காலத்தில் இலக்கியம் தொடர்பான சில ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். பாவலர் நெஞ்சம்(1991), சிங்கப்பூர் வளர்ச்சியில் தமிழ்மொழி(1996) என்னும் நூல்கள் இவரது தமிழ்மொழி, தமிழிலக்கிய ஆய்வுகளுக்குக் கட்டியம் கூறக்கூடியன. இவர் பல அமைப்புகளுக்கு மதியுரைஞராக இருந்தார். அந்த அமைப்புகள் வெளிட்ட நூல்களின் பதிப்பாசிரியராக இவர் விளங்கினார். இருப்பின் அவ்வமைப்புகள் உயர்கல்வி நிறுவனங்களைச் சாராததால் அந்நூல்கள் இங்குக் குறிப்பிடப்படவில்லை.

சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவாக இயங்கும் கலைகள் மன்றம் நான்கு இன மக்களின் இலக்கியப் படைப்புகளைத் தேர்வுசெய்து ஆங்கில மொழிபெயர்ப்புகளுடன் நூல்களாக வெளியிட்டுள்ளது. அவை

The Poetry of Singapore (1985)
The fiction of Singapore (1990)
Journeys: Words, Home and Nation (1995)
Memories and Desires, A Poetic History of Singapore (1998)
Rhythms: A Singaporean Millennial Anthology of Poetry (2000)

இத்தொகுப்பு நூல்களின் முன்னுரையில் இவற்றின் தொகுப்பாசிரியர்கள் சிங்கபூப்பூர்த் தமிழிலக்கிய வரலாறுகள் குறித்து ஆய்வுநிலையில் அறிமுகம் செய்து வைக்கின்றனர். இவ்வாய்வுகளும் படைப்புகளும் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் குறித்துப் பிற இனத்தவர்கள் அறிய வாய்ப்பைத் தருகிறது.

டாக்டர் சுப திண்ணப்பன், டாக்டர் ஏ ஆர்ஏ சிவகுமாரன் ஆகிய இருவராலும் எழுதப்பட்ட“சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாறு ஒரு கண்ணோட்டம்” என்னும் நூல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக கலைகள் மன்றத்தினால் 2002ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நூல் சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வரலாறு பற்றி அறிய விரும்புவாருக்கு ஒரு கலங்கரை விளக்கமாக இருந்து வழிகாட்டக் கூடியதாகும். சிங்கப்பூர்த் தமிழிலக்கியத் தொடர்பான ஆய்வு முயற்சிகள் பெரும்பாலும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கலைகள் மன்றத்தின் சார்பாக டிசம்பர் 1980 இலிருந்து 2000ஆம் ஆண்டுவரை வெளிவந்துள்ள 31 சிங்கா (Singa) இதழ்களில் அவ்வவ்போது சிங்கப்பூர்த் தமிழிலக்கியம் தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகளும், இலக்கியப் படைப்புகளும் இடம்பெறுவதுண்டு நான்கு மொழிப் படைப்புகளும் இதில் இடம்பெறுவதோடு ஆங்கில மொழிபெயர்ப்பும் இதில் இடம்பெறும். கலைகள் மன்றத்தினால் ஆங்கிலத்தில் வெளியிடப்பெறும் மற்றொரு இதழ் the arts என்பதாகும். இவ்வாய்வு இதழிலும் சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன என்பதையும் இங்குக் குறிப்பிடவேண்டும்.

சிங்கப்பூர்க் கலைகள் மன்றமும் கருத்தரங்குகளும்

சிங்கப்பூர்க் கலைகள் மன்றம் 2002ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 5, 6 தேதிகளில் “உலக அளவில் தமிழர்” என்னும் கருத்தரங்கத்தையும் 2004 செப்டம்பர் 7,8 தேதிகளில் “சிங்கப்பூர் - மலேசிய தமிழ் இலக்கிய மாநாடு” என்னும் கருத்தரங்கத்தையும் நடத்தியது. பல்கலைக் கழகமே முன்வந்து நடத்திய இந்தக் கருத்தரங்கில் உலகின் பல நாடுகளிலிருந்தும் ஆய்வாளர்கள் கட்டுரை படித்தனர். மேலும் இந்த ஆய்வரங்குகளில் தமிழ் இலக்கியம் தொடர்பான கட்டுரைகளும் இடம்பெற்றன.

சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழக தெற்காசியத் துறையும் இலக்கிய ஆய்வும்
சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசியத் துறை 12 அக்டோபர் 2003இல் ஏற்பாடு செய்த ஆய்வரங்கம் ஒரு புதுமையானது. சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு வித்தியாசமானதும் கூட. கவிஞர் ந பழநிவேலுவின் படைப்புகள் குறித்து முனைவர் பட்டம் பெற்ற (ஒருவரைத் தவிர) 12 ஆய்வாளர்கள் பல்வேறு கூறுகளில் ஆய்வு செய்து கட்டுரை படித்தனர். முழுவதும் (ஒருவரைத் தவிர) முனைவர் பட்டம் பெற்றவர்களைக் கொண்டு ஆய்வுக்கட்டுரைகள் படிக்கப்பெற்ற ஆய்வரங்கம் இது.

இக்கருத்தரங்குகளினால் ஏற்பட்ட விளைவுகள்.

டாக்டர் அ வீரமணி அவர்களின் ஆலோசனையால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வாய்வரங்குகள் சிங்கப்பூர்த் தமிழர்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சிங்கப்பூர்த் தமிழர்கள் எத்திசையை நோக்கிச் செல்லுகிறார்கள், அவர்கள் எதிர்காலத்தில் என்னென்னவற்றைச் சந்திக்க நேரிடும் அவற்றை நாம் சமாளிக்க என்னென்ன செய்யவேண்டும் முதலான சிந்தனைகளைக் கற்றவர்களிடத்தும் சமூகத் தலைவர்களிடத்தும் இவ்வாய்வரங்குகள் ஏற்படுத்தின. குறிப்பாகப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு இடம்பெற வேண்டும் என்னும் எண்ணத்தைப் பலரின் மனத்தில் ஏற்படுத்தியது. அதுபோல் இலக்கியவாதிகள் தங்கள் படைப்புகளை நூல் வடிவில் கொண்டு வருதல் அவசியம் என்பதைப் படைப்பாளர்களுக்கு நன்கு உணர்த்தியது. செய்தித்தாளில் இடம்பெறும் படைப்புகள் காலவோட்டத்தில் மறக்கப்படும். நூல் வடிவத்தில் இடம்பெறும் படைப்புகளே வரலாற்றில் இடம்பெறும் முதலான பல கருத்துகளை மக்கள் மத்தியில் பதிய வைத்தது. இலக்கியப் படைப்புகளின் தரமும் உரசிப் பார்க்கப்பட்டது. அதனால் நல்ல தரமான படைப்புகள் கிடைக்கலாயின.

2. தேசியக் கல்விக்கழகமும் தமிழ் இலக்கிய ஆய்வும்

உயர்கல்வி நிறுவனங்களின் வரிசையில் இடம்பெறும் அடுத்து நிறுவனம் தேசியக் கல்விக்கழகமாகும். தேசியக் கல்விக்கழகம் தமிழ் இலக்கியத்தை முன்னிறுத்தி கருத்தரங்குகளை நடத்தவில்லை. ஆனால் ஆரம்பக் காலத்தில் தமிழ் மொழி தொடர்பாக ஆய்வரங்குகளை நடத்திடும்போது இலக்கியம் தொடர்பாகச் சில கட்டுரைகள் இடம்பெறுவதுண்டு. 2000ஆம் ஆண்டுக்குப் பின் அதன் பார்வை மொழி தொடர்பாகவே அமைந்தது. அதற்குக் காரணம் தேசியக் கல்விக்கழகத்தின் பணி கற்றல் கற்பித்தல் தொடர்பானவற்றையே மையமாகக் கொண்டு அமைவதால் இலக்கியத்தைத் தனியாக 1992வரை முன்னிறுத்தவில்லை.

“கல்விக்கழகம் 1990ஆம் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின் ஓர் உறுப்பாகத் தேசியக் கல்விக்கழகம் என்னும் பெயர் மாற்றம் பெற்றது. அங்குக் கலைப்புலத்தின் கீழ் இயங்கிய தமிழ்மொழி பண்பாட்டுப் பகுதி, தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்க் கல்வி பற்றிப் பட்டத்திற்குப் பிந்திய நிலை அதாவது முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டது”. (டாக்டர் திண்ணப்பன் - சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் சாதனைகளும் எதிர்காலத்ததிட்டங்களும், பக்கம்60)அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி முதன்முதலில் ஏ ஆர்ஏ சிவகுமாரன் முதன் முதலில் முனைவர் பட்ட ஆய்வேடுகளைத் தமிழில் எழுத அனுமதி பெற்று 1992ஆம் ஆண்டு முதன்முதலில் சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் 1965-1990 - ஒரு திறனாய்வு என்னும் தலைப்பில் டாக்டர் பட்ட ஆய்வுக்குப் பதிந்து கொண்டார். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தினால் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் முதன்முதலில் முனைவர் பட்ட ஆய்வுநிலையில் அப்பொழுதுதான் ஆய்வு செய்யப்பட்டது; எனினும் 1965-1990 காலக்கட்டத்தில் வெளிவந்த சிறுகதைகளைப் பற்றி ஏ ஆர்ஏ சிவகுமாரன் விரிவஞ்சி ஆய்வு செய்யவில்லை.

டாக்டர் தியாகராஜன் சிங்கப்பூர் மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளில் 1965-1990 காலக்கட்டத்தில் நூல்களாக வெளியிடப்பட்ட புதுக்கவிதைகளை ஒப்பீட்டு நோக்கில் முனைவர் பட்டத்திற்காகத் தேசியக் கல்விக் கழகத்தில் ஆய்வு செய்து 2001ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். தொடர்ந்து டாக்டர் சீதாலட்சுமி சிங்கப்பூரில் தமிழ்மொழி இலக்கிய வளர்ச்சியில் மக்கள் தொடர்புச் சாதனங்களின் பங்களிப்பு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து 2001 டாக்டர் பட்டம் பெற்றார்.

தேசியக் கல்விக்கழகத்தில் படிக்கும் மாணவ ஆசிரியர்கள் தாங்கள் படிக்கும் இலக்கியப் பாடம் தொடர்பாகச் சிற்சில வேளைகளில் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்வது உண்டு. சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாறு, இலக்கியங்கள் வெளிவர உறுதுணாயாக இருந்த தமிழ்முரசு நாளேடு, சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியப் படைப்பாளிகள், இலக்கியப் படைப்புகள் முதலான பல தலைப்புகளில் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். ஆனால் அவை நூல்களாக வரவில்லை. இலக்கியப் பாடத்தின் ஒரு கூறாக அவற்றைச் செய்துள்ளனர்.

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய மனிதராக விளங்கும் தமிழவேள் கோ சாரங்கபாணியையும் அவரை அறிந்தவர்கள் பற்றியும் தேசியக் கல்விக் கழகத்தில் 2000ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் (திரு.சாகுல் ஹமீது, திரு.தேவகுமார், குமாரி.பூங்குழலி) ஆய்வு செய்து மலேசியா தேசியப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஏற்பாடு செய்த “தமிழவேள் கோ சாரங்கபாணி முதலாவது மாநாட்டில்” கட்டுரை படைத்துள்ளனர். இம்மாநாட்டில் டாக்டர் கா இராமையா, டாக்டர் A Ra சிவகுமாரன், திருமதி சீதாலட்சுமி, திரு ச செகதீசன் ஆகியோரால் படைக்கப்பட்ட கட்டுரைகள் 2001ஆம் ஆண்டு “சாரங்கபாணியின் தமிழ்த்தொண்டு - ஓர் ஆய்வு” என்னும் நூலாக வெளியீடு கண்டது.

தேசியக் கல்விக்கழகத்தில் பணிபுரிந்த நா கோவிந்தசாமி 1977இல் வெளிவந்த சுமார் 400 சிங்கப்பூர் மலேசிய சிறுகதைகளை இலக்கியக்களம் என்னும் அமைப்பின் கீழ் ஆய்வுசெய்து 1981ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டார். திருவாளர்கள் ஆர்.சூடாமணி, டாக்டர் மா,இராமலிங்கம், டாக்டர் சு வேங்கடராமன், டாக்டர் இரா தண்டாயுதம், டாக்டர் தா வே. வீராசாமி, திரு. வை திருநாவுக்கரசு ஆகிய திறனாய்வாளர்கள் செய்த மதிப்பீடுகளின் பயனாக இந்த 17 சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. பின்னர் இச்சிறுகதைகளைத் தொகுத்துச் சிங்கப்பூர் இலக்கியக்களம் என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டார்.

நா கோவிந்தசாமி சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வளர்ச்சி: ஒரு சமூகவியற் கண்ணோட்டம் என்னும் தலைப்பில் 1979ஆம் ஆண்டு சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்த இலக்கியக் கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரை சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் தொடர்பாக ஆய்வு செய்வோர்க்கு ஒரு முன்னோடி ஆய்வாக அமைந்தது.

3. யீசூன் தொடக்கக் கல்லூரியும் இலக்கிய ஆய்வும்

யீசூன் தொடக்கக் கல்லூரியின் இந்தியக் கலாசார மன்றம் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பு மாணவர்களுக்காக 15- 3- 1988ஆம் நாள் தமிழ் இலக்கியக் கருத்தரங்கு ஒன்றினை முதன் முதலில் ஏற்பாடு செய்தது. இவ்வாய்வரங்கிற்கு ஏற்பாடு செய்த அக்கல்லூரியின் தமிழாசிரியர் வி ஆர் பி மாணிக்கம் அவர்கள் “மாணவர்களின் இலக்கிய ஆர்வத்தைப் பெருக்கும் வகையிலும் மேல்நிலைத் தேர்வுக்கு உதவி செய்யும் நோக்கத்திலும் இக்கருத்தரங்கில் நாவல், கவிதை, நாடகம், சிறுகதை ஆகிய தலைப்புகளில்ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்பட்டன.” என்று குறிப்பிடுகிறார். 1988ஆம் ஆண்டு தொடங்கப்பெற்ற இக்கருத்தரங்கு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பெற்று வருகின்றது என்பது சிங்கப்பூர் வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்றாகும். இருப்பினும் இவ்வாய்வரங்கு முழுமையாகத் தமிழ் இலக்கியத்தை மையமாகக்கொண்டு நடத்தபெற்றது என்று சொல்வதற்கில்லை. ஆண்டுதோறும் சமுதாயத்தில் நிகழ்வுறும் பிரச்சினைகளின் அடிப்படையிலும் கற்றல் கற்பித்தல் தொடர்பாகவும் தலைப்புகள் தேர்வு செய்யப்பெற்றுக் கட்டுரைகள் படிக்கப்பட்டன. 18 ஆண்டுகளாக நடைபெறும் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்புக் கருத்தரங்கில் இதுவரை சுமார் 60 கட்டுரைகள் படிக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் இலக்கியத் தொடர்பாக 11 கட்டுரைகள் படிக்கப் பெற்றுள்ளன. தொடர்ந்து நடந்துவரும் இவ்வாய்வரங்கம் சமுதாயத்திலும் மாணவர்களின் நிலையிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்றால் அது மிகையல்ல. இலக்கியத்தின் பாலும் சமுதாயப் பிரச்சினைகள் தொடர்பாகவும் மாணவர்களையும் சமுதாயத்தின்பால் அக்கறை கொண்டவர்களையும் இக் கருத்தரங்கம் விழிப்படையச் செய்து வருகிறது.

4. பிற உயர்கல்வி நிறுவனங்களும் தமிழ் இலக்கிய ஆய்வும்.

சிங்கப்பூர் இலக்கியங்கள் தொடர்பாகப் பல ஆய்வுகள் தமிழ்ப் பல்கலைக் கழகங்களில் நடைபெற்றுள்ளன. M Phil பட்ட படிப்புக்குச் சிங்கப்பூர் இலக்கியம் தொடர்பாகத் தலைப்புகள் எடுத்துக்கொள்ளப்பட்டு ஆய்வுகள் நடைபெற்று வந்துள்ளன வருகின்றன. குறிப்பாகச் சிங்கப்பூர் கவிஞர் மு தங்கராசனின் கவிதை நூல்களான அணிகலன், உதயம், மகரந்தம், மாதுளங்கனி, பனித்துளிகள், பொய்கைப் பூக்கள் ஆகிய ஆறு நூல்களையும் உள்ளடக்கி ஓர் ஆய்வு நிகழ்ந்துள்ளது. “மு தங்கராசனின் கவிதைகளில் ஓர் உள்ளடக்கப் பார்வை” என்னும் தலைப்பில் M Phil பட்டத்திற்கான ஆய்வேடு மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் கி ர ரேவதி என்பவர் சமர்பித்துப் பட்டம் பெற்றுள்ளார். மு தங்கரசானின் சிறுகதைகளும் பல்கலைக்கழக அளவில் ஆய்வுக்கு உட்பட்டுள்ளன. “சிங்கைக் கவிஞர் மு தங்கராசனின் சிறுகதைத்திறன்” என்னும் தலைப்பில் M Phil பட்டத்திற்கான ஆய்வேடு சென்னைப் பல்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுளது. இவ்வாய்வினைச் செய்து பட்டம் பெற்றவர் ஸ்ரீதர் ஆவார்.

சிறுகதை எழுத்தாளரான ஜெ எம் சாலியின் படைப்புகள் குறித்து இரு எம் பில் பட்ட ஆய்வுகள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் ஒரு ஆய்வு மதுரை காமராசர் பல்கலைக்ககழகத்திலும் முறையே சமர்பிக்கப்பட்டுப் பட்டங்கள் பெறப்பட்டுள்ளன.

தற்சமயம் ஜெ எம் சாலியின் படைப்புகள் குறித்து ஒரு முனைவர் பட்ட ஆய்வு பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் சிங்கப்பூர் சிறுகதைகள் குறித்து அழகப்பா பல்கலைக்கழகத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த ஆய்வுகள் தவிர்த்துச் சிங்கப்பூரிலிருந்து தமிழகத்திற்குத் தமிழ் பி ஏ படிக்கச்சென்ற ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழாசிரியர்கள் தங்கள் பாடப்பகுதியில் ஒரு கூறாக நிகழ்த்திய ஆய்வுகளும் உள்ளன. எல்லா ஆசிரியர்களும் இத்தகு ஆய்வைச் செய்யவில்லை. சில கல்லூரிகளில் மட்டுமே இத்தகு ஆய்வு செய்வதற்கு வாய்ப்பு வசதிகள் உள்ளன. அவ்வாய்வுகளுள் சில வருமாறு

மா லோஸனி - பரணன் கவிதைகள்

மஞ்சுளா - முருகதாசனின் சிறுவர் பாடல்கள்
சரவணன் - நா கோவிந்தசாமியின் தேடி - ஒரு திறனாய்வு
இளவரசி - சிங்கப்பூரில் தமிழ் மேடை நாடகங்களின் வளர்ச்சி 1987-1997
அன்பரசி - வீரப்பன் லட்சுமியின் சிறுகதைகள் - ஓர் ஆய்வு
சீத்தாராமன் - சிங்கப்பூரில் சிறுகதை
எம் ஏ பட்டத்திற்காகவும் சில தமிழாசிரியர்கள் சிங்கப்பூர் இலக்கியம் தொடர்பாக ஆய்வுகள் செய்துள்ளனர். அவை வருமாறு

எஸ் ஜெகதீசன் - சிங்கப்பூர் இலக்கியம் இராம கண்ணபிரானின் உமாவுக்காக - ஒரு திறனாய்வு
மா லோஸனி - முருகானந்தம் கவிதைகள்

இவ்வாறு சிங்கப்பூருக்கு அப்பாலும் சிங்கப்பூர் இலக்கியம் தொடர்பான ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன.

பொதுவாக உயர் கல்வி நிறுவனங்களில் மட்டும் இலக்கிய ஆய்வுகள் சிங்கப்பூரில் நிகழவில்லை. சொல்லப்போனால் உயர்கல்வி நிறுவனங்களைத் தவிர்த்து அதிக ஆய்வுகள் சங்கங்களும் அமைப்புகளும் ஏற்பாடு செய்த கருத்தரங்குகளில் படைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்துக் குறிப்பிடும் டாக்டர் திண்ணப்பன் அவர்கள் “அகலமான போக்கில் தகவல்களைத் திரட்டித்தரும் முயற்சிகளே அதிகம். ஆழமாகக் காணும் போக்குப் பெருக நாம் முயல வேண்டும். அளவால் மிகுதியாகத் தோன்றலாம். தரத்தால் உயர்வுடையவை என்று கூறிவிட முடியாது. என்கிறார்” – (டாக்டர் சுப திண்ணப்பன் - சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் சாதனைகளும் எதிர்காலத் திட்டங்களும், பக்கம்77).

முடிவுரை

சிங்கப்பூரில் இலக்கியத் தொடர்பான ஆய்வுகள் உயர்கல்வி நிறுவனங்களில் இன்னும் அதிகமாக இடம்பெற வேண்டும். அப்பொழுதுதான் இலக்கியப் படைப்பாளிகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் கிடைக்கும். தரமான ஆய்வுகள் வழித் தரமான இலக்கியங்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தீயில் இட்ட பொன்னே மிளிரும் . அதுபோல ஆய்வுகளுக்கு உட்படும்போதே தரமான இலக்கியங்களும் உருவாகும்.

துணைநூற் பட்டியல்
டாக்டர் அ வீரமணி - சிங்கப்பூர் வளர்ச்சியில் தமிழ்மொழி
சிங்கப்பூர்ப் பல்கலைக் கழகத் தமிழர் பேரவை - சிங்கப்பூரில் தமிழும் தமிழிலக்கியமும் ஆய்வரங்க மலர் Vol 1,2,3,4,5,6,7
பல்கலைக் கழகத் தமிழர் பேரவை ஆய்விதழ் (1977, 1982)
டாக்டர் ஏ ஆர்ஏ சிவகுமாரன் - சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் சாதனைகளும் எதிர்காலத் திட்டங்களும்
டாக்டர் கா இராமையா - சாரங்கபாணியின் தமிழ்த் தொண்டு - ஓர் ஆய்வு
வரலாற்றுத் துறை, மலேசியத் தேசியப் பல்கலைக்கழகம், பாங்கி, சிலாங்கூர்- நம் முன்னோடிகள்

பண்பாட்டின்வழி மொழிக்கல்வி

உலக இயக்கத்தின் அடிப்படையாக விளங்குவது அந்தந்த நாட்டு மக்களின் பண்பாடு. பண்பாட்டோடு விளங்கும் நல்லவர்கள் இருப்பதனால்தான் “நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யுமாம் மழை” என்பர். இந்தப் பண்பாடு என்பது பல பண்புகளின் கூட்டுறவில் முகிழ்த்தது ஆகும். இதுபற்றிக் கூறும் முன்னாள் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் பொன்னுசாமி அவர்கள் பண்பு என்பது ஒருமை; பண்பாடு என்பது பன்மை என்பார்.

பண்பாடு என்னும் சொல் நம் தமிழிலக்கியத்தில் சங்க காலத்திலிருந்தே வந்துள்ளதா? இல்லை. 1937இல் ரசிகமணி டி கே சிதம்பரநாத முதலியார் இச்சொல்லை உருவாக்கினார் என்று வையாபுரிப்பிள்ளை தம் தமிழ்ப் பண்பாடு என்னும் நூலில் கூறியிருப்பதைக் காணலாம். தமிழ்ப் பண்பாடு என்பது தமிழ் உணர்வை, தமிழ்ச்சொற்களை இணைத்து நிற்பது என்பதை மறந்துவிடக்கூடாது.

கற்பித்தலும் பண்பாடும்

மொழி அல்லது இலக்கியம்வழிப் பண்பாட்டை அறிதல் என்பது பொதுவாகப் பின்பற்றப்படும் ஒன்று. ஆனால், பண்பாட்டுவழி மொழிக் கல்வி என்பது புதிய நெறிமுறை. மொழியையும் இலக்கியத்தையும் ஒரு பாடப் பகுதியாகக் கற்பிக்கப்படும் ஒரு இயந்திரத் தன்மையைப் புறக்கணித்துவிட்டுப், பண்பாட்டை முதலில் வைத்து அதன்வழி மொழியைக் கற்பிப்பதுதான் இம்முறை ஆகும்.

பண்பாட்டின்வழி இலக்கணம் கற்பித்தல்

“மூத்தோர் சொல் கேள்”, “பெரியாரைத் துணைக்கோடல்” என்பன நம் தமிழ் வழக்கு. அதாவது பெரியவர்களுக்கு மதிப்புக் கொடுப்பது என்பது நம் பண்பாடு. இப்பாண்டினை ஒட்டியே நம் மொழியும் அமைந்துள்ளது. சாதாரணமாக நம்மைவிட வயதில் குறைந்தவர்களைக் குறிப்பிடும்போது ‘நீ’ என்கிறோம். வயதில் பெரியவர்களைச் சுட்டும்போது ‘நீங்கள்’ என்கிறோம். இவற்றுள் நீ என்பது ஒருமை; நீங்கள் என்பது பன்மை. இது பொதுவான இலக்கணக்கூறு. இருப்பினும் வயதில் முதிர்ந்தவர் எண்ணிக்கையில் ஒருவராக இருந்தாலும் பன்மையைப் பயன்படுத்துகிறோம். இது மரியாதை ஒருமை. இந்தப் பண்பாட்டுக் கூறுகளை எடுத்துக் கூறுவதன்வழி இலக்கணக் கூறுகளில் ஒன்றாகிய ஒருமை, பன்மை, மரியாதை ஒருமை ஆகியவற்றைக் கற்பிக்க முடியும். அன்றியும், முன்னிலையில் இருக்கும் ஒருவரை அழைப்பதற்கு என்னென்ன சொற்களைப் பயன்படுத்தலாம்; அவற்றை எந்தெந்த வேளைகளில் பயன்படுத்தலாம் என்பனவற்றையும் அறியலாம். எடுத்துக்காட்டாக,

நீ- நம்மை விட வயதில் குறைந்தவர்களைக் குறிப்பிடும்போது
நீர் - சம வயதுடையவர்களைக் குறிப்பிடும்போது
நீவிர்/நீங்கள் - நம்மைவிட வயதில் அதிகமானவர்களைக் குறிப்பிடும்போது
தாங்கள் - சான்றோர்களையும் உயர்ந்த நிலையில் உள்ளவர்களையும் உயர்
பதவி வகிப்பவர்களையும் சுட்டும்போது
அடிகள் - துறவிகள், ஞானிகள் முதலியோரைச் சுட்டும்போது
இச்சொற்கள் முன்னிலையில் இருக்கும் ஒருவரைக் குறிப்பிடத்தான் பயன்படுகின்றன. இருப்பினும் நமது பண்பாட்டின்வழி விளக்கும்போது இச்சொற்களின் ஆழ்ந்த பொருளை நன்கு உணரச் செய்யலாம். அன்றியும், மொழிவளம் பெருகவும் எந்தெந்தச் சூழல்களில் எந்தெந்தச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்னும் நிலையையும் உணர்த்த முடியும்.

மேற்குறிப்பிட்டதுபோல் பண்பாட்டின்வழி விளக்க வேண்டிய மற்றொன்று மூவிடப்பெயர்கள். உன், என், உங்கள், எங்கள் என்ற சொற்களைப் பயன்படுத்தம்போது பண்பாட்டுப் பின்னணியை உணர்ந்து பயன்படுத்த வேண்டும். வயதான மூத்தவர்களைக் குறிப்பிடும்போது எங்கள், உங்கள் என்னும் பன்மை வடிவத்தை மரியாதை காரணமாகப் பயன்படுத்த வேண்டும். எங்கள் அப்பா, எங்கள் அண்ணன் என்றும் வயது ஒத்தவர்களையும் வயது குறைந்தவர்களையும் குறிப்பிடும்போது என் தம்பி என் நண்பன் என்றும் குறிப்பிட வேண்டும்.

இதுபோன்றே ஊர், நாடு, வீடு முதலிய சொற்களுக்கும் எங்கள் என்ற அடைமொழியைப் பயன்படுத்த வேண்டும். எங்கள் வீடு, எங்கள் ஊர், எங்கள் நாடு என்றே கூற வேண்டும். இதற்குக் காரணம் மரியாதை கிடையாது. கூட்டுரிமையே (Collective Possession) காரணமாகும். இவையும் பண்பாட்டுக் கூறுகளின் நிழலாட்டத்தில் பிறந்தவைதான். இங்கு நாம் முன்னிலையாரை விலக்கிய தன்மை பன்மை வந்துள்ளதைக் காணமுடிகிறது. “நாம் அனைவரும் சிங்கப்பூரர்” என்பதில் நாம் என்பது முன்னிலையாரை உள்ளடக்கிய தன்மை பன்மை ஆகும்.

பண்பாட்டின் வழி உறவுப்பெயர்களை அறிமுகப்படுத்தல்

பண்பாட்டுக் கூறுகளில் முதன்மையான இடத்தைப் பெறுவது உறவுப் பெயர்கள். இவ்வுறவுப் பெயர்களை விளக்கும்போது பண்பாட்டின் அடிப்படையிலேயே விளக்க வேண்டியுள்ளது. தமிழில் அப்பாவுடன் பிறந்த ஆண்களையும், அம்மாவுடன் பிறந்த ஆண்களையும் வேறுபடுத்திக் காட்டும் வகையில் உறவுப் பெயர்கள் அமைந்துளள்ன, அப்பாவுடன் பிறந்தவர்களைப் பெரியப்பா என்றோ சிற்றப்பா என்றோ அவர்களின் வயதிற்கேற்பக் கூறுகிறோம். அம்மாவுடன் பிறந்தவர்களை மாமா என்கிறோம். ஆனால் ஆங்கிலத்தில் இந்த வேறுபாடின்றி Uncle என்றே அழைக்கின்றோம். உறவுப் பெயர்களைக் கற்பிக்கும்போது பண்பாட்டின்வழிக் கற்பித்தாலே அதன் பொருள் விளங்கும்.

பண்பாட்டின்வழிச் சொல்வளத்தைப் பெருக்குதல்

இன்று நம்நாட்டுக் கல்விக்கொள்கையில் அதிகமாகப் பேசப்படுவது குறைவான கற்பித்தலும் நிறைவான கற்றலும் (Teach less Learn more) என்னும் கூற்றாகும். பண்பாட்டின்வழி மொழியைக் கற்பிக்கும்போது இந்த அணுகுமுறையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்? மொழி என்பது தேவையைக் கருதி வளரக்கூடிய ஒரு கருத்துப் பரிமாற்ற வாகனம். காலத்திற்கும், தேவைக்கும், இடத்திற்கும், சூழலுக்கும் தக்கவாறு இவ்வாகனம் தன் உருவத்தையும், வேகத்தையும் மாற்றிக்கொள்கிறது. இது போலவே ஆசிரியர்களும் தேவை, சூழல் முதலியவற்றின் அடிப்படையில் மொழி கற்பித்தலில் மாற்றத்தைச் சேர்க்க வேண்டும்.

மாணவர்கள், ஒரு தமிழ்த் திருமணத்தை நேரிடையாகக் காண்பதன் மூலமோ ஒளிப்பதிவு நாடாவில் பார்ப்பதன் மூலமோ பல மணி நேரம் பாடம் நடத்திப் புரிய வைக்கும் ஒன்றை ஒரு சில மணிகளில் புரிய வைக்கலாம். அன்றியும் இப்பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகிய திருமணச் சடங்கின் மூலம் அவன் நிறைய சொற்களைத் தெரிந்துகொள்கிறான். எடுத்துக்காட்டுக்கு ஒரு திருமண மண்டபத்தில் நுழைந்து வருவோமே.

வாசலில் வரவேற்பது சந்தனம், குங்கும், பன்னீர் செம்பு, பன்னீர், பூ, மிட்டாய் முதலியன. திருமண மண்டபத்தின் உள்ளே அழகிய அலங்காரங்கள், வண்ண வண்ண பூக்கள், மாவிலை தோரணங்கள். - மணமேடையில் மணமேடை, மாப்பிள்ளை, பெண், அய்யர், சம்மந்தி வீட்டார், விளக்கு, அம்மி, ஒதியமரக் கிளை அல்லது அரசமரக் கிளை, அரசாணிப்பானை, யாக குண்டம், நெருப்பு, புகை, தேங்காய், பழம், பூ, மஞ்சள் அரிசி, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பட்டுவேட்டி, பட்டுத்துண்டு, பட்டுப்புடவை, தாலி. - மணமன்றத்தில்- உற்றார், உறவினர், நண்பர்கள், சிறுவர்கள். - மணச் சடங்கில் தாலி கட்டுதல், மாலை மாற்றுதல், மோதிரம் போடுதல், பாதபூசை செய்தல், அக்கினியை வலம் வருதல், மெட்டி போடுதல், கங்கணம் கட்டுதல், கங்கணம் அவிழ்த்தல். - விருந்தில் வாழைஇலை, பிரியாணி, குருமா, வடை, பாயாசம், பொரியல், பச்சடி, ஊறுகாய், அப்பளம், தயிர். - மற்றும் அன்பளிப்புகள், மொய் கொடுத்தல், மணமக்களை வாழ்த்துதல், புகைப்படக்காரர், ஒளிப்பதிவு படம் எடுப்பவர் என்று குறைந்தது ஐம்பதுக்கும் மேற்பட்ட சொற்களை எளிதில் பொருள் புரியும்படியும் மனத்தில் நிற்கும் வண்ணமும் அறியச் செய்யலாம். இவ்வாறு பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவரும்போது சொல்வளம் பெருகுகிறது. பண்பாடு அறியப்படுகிறது. மொழியும் கைவரப் பெறுகிறது.

நம் சிங்கை மாணவர்களுக்குத் தமிழ்மொழியில் பெரும் தடையாக இருப்பனவற்றுள் ஒன்று எந்தெந்தச் பொருள்களுக்கு என்னென்ன பெயர்கள் என்பது தெரியாமல் இருப்பது; பொதுவாகச் சொல்வளம் குறைவாக இருப்பது. இதனை நீக்கப் பண்பாட்டுக் கூறுகளோடு தொடர்புடைய பல நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச்செல்லலாம்; அல்லது ஒளிப்பட நாடாவில் அவற்றைக் காண்பிக்கலாம். இவற்றின் வழி சொல்வளம் பெருகும். ஒரு விருந்துக்குச் செல்லும்போதும் சமையல் பொருள்களைக் கவனிக்கும்போதும் சமைக்கும் முறையை அறியும்போதும் நிறைய சொற்களைத் தெரிந்துகொள்ள வாய்ப்புக் கிடைக்கின்றது.

பண்பாட்டு விழுமியங்களைக் (values) கற்பித்தல்

சிங்கையில் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கு இருக்கக்கூடிய மிகப் பெரிய இரு பொறுப்புகளுள் ஒன்று மொழியைக் கற்றுக்கொடுத்தல், மற்றொன்று தமிழ்ப் பண்பாட்டை அறிவுறுத்தல். இவ்விரு பணிகளைச் செவ்வனே செய்யும்போதே நம் மாணவர்களைத் தமிழ்மொழியில் சிறந்தவர்களாக உருவாக்க முடியும். நம் பண்பாட்டில் புதைந்து கிடக்கும் விழுமியங்களைத் தெரியப்படுத்துவது ஆசிரியர்களின் கடமை.

எடுத்துக்காட்டுக்கு நாம் சமைக்கும் பொருள்களில் எவ்வளவு மருத்துவ குணம் இருக்கின்றது என்பதைத் தெரியப்படுத்துவது. அண்மையில் சிங்கப்பூரில் ஏற்பட்ட சார்ஸ் நோயின்போது ரச உணவு சாப்பிடாதவர்களும் அதனைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டதைக் கேள்வியுற்றோம். இதற்குக் காரணம் நாம் வைக்கும் ரசத்தில் சீரகம், பூண்டு, மிளகு, மஞ்சள் தூள், கடுகு, புளி முதலியன சேர்வதுண்டு. இவற்றுள் சீரகம் தன்பெயருக்கு ஏற்ப (சீர் + அகம்) உடலைச் சீராக வைத்துக்கொள்வதில் உதவுகிறது; உடலில் உள்ள வேண்டாத கொலஸ்டிராலைக் குறைக்கிறது பூண்டு; விஷத் தன்மைகளைப் போக்குகிறது மிளகு; புற்றுநோய் வராமலும் புண்களை ஆற்றும் குணமும் கொண்டிருக்கிறது மஞ்சள்; இவ்வாறு ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியே சிறப்புக் குணங்கள் உள்ளதால்தான் சார்ஸ் வந்தபோது பலரிடம் ரசம் சிறப்பிடம் பெற்றது போலும். பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகிய நம் உணவு முறையைக் கற்பிப்பதுதன் மூலம் உடல் நலத்தையும் மன நலத்தையும் பக்குவப்படுத்துவதோடு சொல் வளத்தையும் பெருக்க முடியும்.

நம் தமிழ்ப் பண்பாட்டில் மறைந்திருக்கும் கூறுகளை மாணவனுக்கு வெளிப்படுத்தி அவனை விழிப்படையச் செய்வதும் ஆசிரியரின் கடமை. நம் பண்பாடுகளில் ஒன்று வாழை இலையில் உண்பது. அதிலும் குறிப்பாக விருந்தினர்களுக்குத் தலைவாழை இலையில் அதாவது குருத்து இலையில் உணவு பரிமாறுவது நம் பழக்கம். இந்த இலையைப் போடும்போது சிலருக்கு ஏற்படும் ஐயம், இலையின் நுனி சாப்பிடுபவரின் வலப்பக்கத்தில் இருப்பதா அல்லது இடப்பக்கத்தில் இருப்பதா? என்பது. நம்மவரில் சிலர் எப்பக்கத்தில் இருந்தால் என்ன? இலையையா சாப்பிடப்போகிறோம்? என்று கூறுவதும் உண்டு. இது விதண்டாவாதம்.

சாப்பிடுபவரின் இடப்பக்கத்தில் இலையின் நுனி இருக்க வேண்டும். அதாவது வலப்பக்கத்தில் இலையின் வெட்டிய பகுதி இருக்க வேண்டும். இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. வாழை மரத்திலிருந்து வாழை இலை வெளிவரும்போது முதலில் அதன் குறுத்துச் சுருண்டு வெளிவரும். சுருண்ட பகுதியிலிருந்து முதலில் வெளிவருவது வாழையிலையின் நடுத்தண்டிற்கு இடப் பகுதியிலிருக்கும் இலைப்பகுதி; ஒரு சில நாட்கள் கழித்து வெளிவருவது தண்டின் வலப் பகுதியிலிருக்கும் இலைப்பகுதி. முதலில் வெளிவந்த இலைப்பகுதி பின்பு வந்த இலைப் பகுதியைவிட அழுத்தமாகவும் வலிமையாகவும் இருப்பது இயல்பு. அப்பகுதியைச் சோறு பிசைந்து சாப்பிடுவதற்குப் பயன்படுத்தும்போது இலை கிழியாமல் இருக்கும். அன்றியும் சாப்பிடுபவர் இலையின் அதிகப் பரப்பளவைப் பயன்படுத்த இம்முறையில் இலையைப் போடுவதே வசதியாக இருக்கும்.

இலையின் ஈறுவாய் ஏன் வலப்பக்கம் இருக்க வேண்டும் என்பதற்கு இவை எல்லாம் காரணங்கள். (பெரியபுராணம் இதுபற்றிக் கூறுவதாவது, அப்பூதியடிகள், அப்பரடிகளை வரவேற்று விருந்து பேணும்போது, உணவுபற்மாறும் வாழை இலையை எப்படிப்போட்டார் என்பதனை, “நிகழ்ந்தஅக் கதலி நீண்ட குருத்தினை விரித்து நீரால்
மகிழ்ந்துடன் விளக்கி ஈர்வாய் வலம்பெற மரபின் வைத்தார்”
(அப்பூதியடிகள்,39)

இது போன்று நாம் பெரியோர்களுக்கு மரியாதை கொடுக்கும்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? நம்முடைய ஆடை அணிகலன்களில் எத்தனை வகைகள் உண்டு? அவற்றின் பெயர்கள் என்னென்ன? அவற்றை எப்பொழுதெல்லாம் பயன்படுத்துகிறோம்? என்பன போன்ற பண்பாட்டுக் கூறுகளை மாணவர்களுக்கு எடுத்துக் கூறுவதன் மூலம் சொல் வளமும் தமிழ்மொழி புழக்கமும் அவர்களுக்கிடையே அதிகரிக்கும்.

மரபுத்தொடர் கற்பித்தல்

காது குத்துதல் என்றால் நமக்கு இருபொருள்கள் நினைவிற்கு வரும். ஒன்று சடங்கு, மற்றொன்று பொய்கூறுதல் என்னும் மரபுத்தொடர். இந்த இரண்டிற்கும் ஒரு தொடர்பு உண்டு. காது குத்துதல் என்னும் சடங்கின் மூலம்தான் இந்த மரபுத்தொடரே உருவாயிற்று.

சிறு குழந்தையாக இருக்கும்போது மாமன் மடியில் குறுக்குமாலை தவழ அமர்ந்திருக்கும் குழந்தையிடம் எல்லோரும் அறியப் ‘பத்தர்’ காது குத்துகிறார். அதாவது முதலில் பொய் கூறுகிறார். காதுகுத்தும்போது ஊசியைத் தோட்டோடு இணைத்து அந்த ஊசியால் காதைக் குத்தித்தான் தோட்டை அணிவிக்கிறார். இருப்பினும் குழந்தை, பயப்படாமல் இருக்க அந்தக் குழந்தையிடம் எல்லோரும் அறியப் பொய் கூறுகிறார். அதாவது என் கையில் இந்தத் தோடுதான் உள்ளது; வேறொன்றும் இல்லை; நான் இந்தத் தோட்டை உன் காதில் வைப்பேன் அது அப்படியே ஒட்டிகொள்ளும் என்று கூறி மனத்தளவில் அந்தக் குழந்தையைத் தயார்படுத்துகிறார். பின் விரல்களுக்கு இடையே ஊசியை மறைத்து, பின் தோட்டோடு இணைத்து, தான் கூறியதற்கு மாறாகக் காது குத்திவிடுகிறார். அதாவது அக்குழந்தையை ஏமாற்றிவிடுகிறார்.

இங்கு உற்றார் உறவினர் பெற்றோர் முன்னிலையில் அக்குழந்தையை ஏமாற்றுகிறார். அதனால் அக்குழந்தைக்குச் சிறிது நேரம் துன்பம் ஏற்பட்டாலும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியே ஏற்படுகிறது. இந்த மரபில் வந்ததுதான் காதுகுத்துதல் என்னும் மரபுத்தொடர். இத்தொடரை “காவலரிடம் பிடிபட்ட திருடன் அந்தப் பொருளைத் தான் எடுக்கவில்லை என்று காதுகுத்தினான்” என்று பயன்படுத்துவது மிகவும் தவறு.

திராட்சைப் பழங்களை விருப்பித் தின்னும் இராமு மாமாவிற்குக் கொடுக்க வேண்டிய திராட்சைப் பழங்களில் ஒரு பகுதியைத் தின்றுவிட்டு அவை கீழே விழுந்ததால் கெட்டுப் போய்விட்டன என்று மாமாவிற்கே காது குத்தினான். இவ்வாறு பண்பாட்டின்வழி அதன் பின்னணியைக் கூறிக் கற்பிக்கும்போது மாணவர்கள் அதன் உண்மையான பொருளை அறிந்து மொழியில் சிறப்படைவர். ஒவ்வொரு மரபுத் தொடரும் நம் பண்பாடு, பயன்பாடு ஆகயவற்றின்வழித் தோன்றியதுதான் என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.

பண்பாட்டின்வழி எழுத்துத்திறனையும் சிந்தனைத் திறனையும் கற்பித்தல்

இன்றைய கற்பித்தல் கூறுகளில் ஒன்று சிந்தனைத்திறன். இதனையும் நம் பண்பாட்டின்வழிக் கற்பிக்கலாம். நமக்கே உரிய நம் பாரம்பரியக் கதைகளை எடுத்துக்கூறிச் சிந்தனைத் திறனோடு மொழியைக் கற்பிக்கலாம்.

பொற்கைப் பாண்டியன் கதையை மாணவர்களுக்கு எடுத்துக்கூறல். கதை வருமாறு. பாண்டிய மன்னர் இரவு நேரங்களில் மாறு வேடங்களில் நகர் வலம் வருவது இயல்பு. அவ்வாறு வரும்போது ஒரு வீட்டில் “நான் காசிக்குப் போனால் என்ன? நம் மன்னனின் ஆட்சியில் எவ்விதக் குறைப்பாடும் வராது; நீ தனியாக இருப்பது குறித்து எவ்விதப் பயமும் கொள்ளாமல் தைரியமாக இரு”. என்னும் உரையாடலைக் கேட்டான். கணவன் மனைவிக்கு இடையே நடந்த அந்த உரையாடலின்வழிச் செய்தியை ஒருவாறு ஊகித்துக்கொண்டு அந்த இல்லத் தலைவன் கூறிய வார்த்தைக்கு ஏற்ப அந்த இல்லத்தைப் பாதுகாத்து வந்தான்.

ஒருநாள் இரவு, தனியாக இருந்த அந்தப் பெண் வீட்டில் ஓர் ஆண்குரல் கேட்கவே யாரோ திருடன் வந்திருக்கிறான் என்று எண்ணிக் கதவைத் தட்டினான். அடுத்த கணம் “யாரது இந்த நேரத்தில்?” என்று ஒரு ஆண் குரல் பதில் தந்தது. அரசன் அந்த ஆண்மகன் அவளது கணவன்தான் என்பதை ஊகித்துக்கொண்டான். இருப்பினும் தான் கதவைத் தட்டியதால் ஏதேனும் அப்பெண்ணுக்குக் கெடுதல் வரலாம் என்று எண்ணி அத்தெருவில் உள்ள எல்லா வீட்டுக் கதவுகளையும் தட்டிவிட்டுச் சென்றான். மறுநாள் மக்கள் அரசனிடம், “நடுநிசியில் எங்கள் வீட்டுக் கதவுகளை யாரோ ஒருவன் தட்டிச் சென்றான்” என்று முறையிட்டனர். மன்னனும் அவனை நான் பிடித்து வைத்திருக்கிறேன்; அவனுக்கு என்ன தண்டனைக் கொடுக்கலாம் என்று மக்களிடம் கேட்டான். மக்களும் அவன் கையை வெட்டவேண்டும் என்று கூறினர். அதன்படியே மன்னன் தன் உடைவாளால் உடனே தன் கையை வெட்டிக்கொண்டான். பின்பு மக்கள் விவரம் அறிந்தனர். அதன் பின்னர் வெட்டிய கைக்குப் பதிலாகப் பொன்னால் கை செய்து வைத்தனர். அன்று முதல் அவன் பொற்கைப் பாண்டியன் என வழங்கப்பட்டான்.

இக்கதையின் மூலம் பல முறைகளில் மொழியைக் கற்பிக்கலாம். மன்னன் ஏன் எல்லாருடைய வீட்டுக் கதவுகளையும் தட்டினான்? மன்னன் இரவு நேரத்தில் நகர் வலம் வரக் காரணம் என்ன? மன்னன் ஏன் தானே நகர்வலம் சென்றான்? மன்னன் செய்தது சரியா? பொன்னால் கை செய்து வைத்துக்கொள்வதனால் ஏதேனும் பயன் உண்டா? இவ்வாறு பல்வேறு வினாக்களின் வழி மாணவர்களின் சிந்தனையைத் தூண்டி அவர்களை உரையாடச் செய்யலாம். சரி தவறு என்னும் அடிப்படையில் வினாக்கள் அமைத்து மொழிப்பயிற்சி கொடுக்கலாம். கேட்டல் கருத்தறிதலாக வினாக்களை அமைக்கலாம். கேட்ட கதையை மீண்டும் எழுதச் சொல்லலாம். கதையில் இடம்பெற்ற சொற்களில் சிலவற்றை வாக்கியங்களில் அமைக்கச் சொல்லலாம். இன்னும் மாணவர்களின் நிலைக்கு ஏற்பப் பல பயிற்சிகளையும் ஆசிரியர்கள வழங்கலாம்.

சில நகைச்சுவைக் கூறுகளைப் புரிந்து கொள்வதற்குக்கூடப் பண்பாட்டுக் கூறுகளை அறிந்திருத்தல் அவசியமாகும். “வீட்டில் இராமன் வெளியில் கிருஷ்ணன்” என்னும் பழமொழி முழுக்க முழுக்கப் பண்பாட்டின் அடிப்படையில் அமைந்ததாகும். இராமாயணக் கதையும் மகாபாரதக் கதையும் தெரிந்திருந்தால்தான் இத்தொடரின் பொருளை நாம் இரசிக்க முடியும்.

கற்பித்தல் என்பது ஒரு இசைக் கருவியை வாசிப்பது போன்றது. யார் வேண்டுமானாலும் இசைக் கருவியை வாசிக்கலாம். ஆனால் அக்கருவியிலிருந்து பிறக்கும் நாதம் நாம் எவ்வளவு காலம் பயிற்சி செய்திருந்தோமோ அதற்கு ஏற்பத்தான் அமையும். அதுபோலத்தான் கற்பித்தல் நடவடிக்கையும். நாம் எந்த அளவிற்குத் திட்டமிட்டு, பயிற்றுக் கருவிகளைத் தயாரித்துப் பாடம் நடத்துகின்றோமோ அதற்கேற்பத்தான் நம் கற்பித்தலும் அமையும். சரியான திட்டமிடுதலோடு போதிய உழைப்பையும் சேர்த்துப் பண்பாட்டின்வழி மொழி கற்பித்தலை நடத்தும்போது மாணவர்களும் ஆசிரியர்களும் ஒருங்கே பலன் அடைவார்கள் என்பது உறுதி.

இனிய முறையில் மொழி கற்பிப்போம்! எளிதாக அதனைக் கைவரப்பெறச் செய்வோம்!!

பொற்கை பாண்டியன் கதையைக் கேட்டபின் கீழ்க்கண்ட முறையில் பயிற்சிகள் தயாரித்துக் கொடுக்கலாம். எடுத்துக்காட்டுக்குச் சில.
அ) கீழ்க்கண்ட வாக்கியங்கள் சரியா தவறா எனக் குறிப்பிடுக.
சரி தவறு

மன்னன் மாறு வேடங்களில் எப்பொழுதும் நகர் வலம் வருவான்.

மன்னன் அன்று எல்லாருடைய வீட்டுக் கதவுகளையும் தட்டினான்.

ஆ) சரியானவற்றோடு இணைக்க

மன்னன் நகர் வலம் வருதல் கணவன் மனைவி இடையே நடைபெறுகின்ற உரையாடல் நல்லாட்சி நடைபெறுகிறது என்பதை தெரிவிக்கிறது தன்னால் ஒரு பெண்ணுக்குக் கெட்டபெயர் வரக் கூடாது வீட்டுக் கதவுகளைத் தட்டக் காரணம் தன்னைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள

இ) கோடிட்டு இடங்களை நிரப்புக.

பாண்டியன் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக ----------------------- . மன்னன் நாட்டின் நிலையை அறிந்துகொள்ள இரவு நேரங்களில் ------------வருவான். மன்னன் நீதி -------------------- ஆட்சியை நடத்தி வந்தான்.
ஈ) கீழ்க்கண்ட சொற்களை வாக்கியங்களில் அமைக்க
இயல்பு உரையாடல் ஆண்மகன் தண்டனை வாளால்
உ) கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை அளிக்க.
மன்னன் ஏன் எல்லருடைய வீட்டுக் கதவுகளையும் தட்டினான்? மன்னன் இரவு நேரத்தில் நகர் வலம் வரக் காரணம் என்ன? மன்னன் ஏன் தானே நகர்வலம் சென்றான்? மன்னன் தன்னைத் தண்டித்துக்கொண்டது சரியா? பொன்னால் கை செய்து வைத்துக்கொள்வதனால் ஏதேனும் பயன் உண்டா? மக்கள் முறையிடும்போது நீ பொற்கை பாண்டியன் இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பாய்?

Apr 28, 2008

சிங்கப்பூர் சின்னஞ்சிறிய நாடு.அனைத்துநாட்டு மக்களாலும் விரும்பப்படும் நாடாக உள்ளது.
ஏறத்தாழ நூறாண்டுக் காலத்திற்கு மேலான தமிழ் இலக்கிய வளர்ச்சியை இந்நாட்டில் பார்க்கமுடிகிறது.இங்குத் தமிழ் கற்க வசதியை அரசு செய்து தந்துள்ளது. தமிழ்,ஆங்கிலம், சீனம், மலாய் மொழிகள் ஆட்சிமொழிகளாகும்.சிங்கப்பூரில் தமிழ்க்கல்வி,தமிழர் பற்றிய என் எண்ணங்களை,ஆய்வுகளை இத்தளத்தில் தொடர்ந்து எழுத உள்ளேன்.